சோதனையின் காலங்களில் நம்முடைய பெலன் குறுக ஆரம்பிக்கிறது. நம்மால் சரியாக சிந்திக்க முடிவதில்லை., பிசாசனானவன் நம்முடைய பெலனை முழுவதுமாக முடக்க ஆரம்பிக்கிறான். வேதம் சொல்கிறது., பிசாசானவன் எவனை விழுங்கலாமோவென்று வகை தேடி சுற்றி திரிகிறான். திடீரென்று நமக்கு முன்பாக ஒரு சிங்கம் வருகிறதென்று வைத்துக்கொள்வோம். அதனுடைய பார்வையிலும் அதனுடைய உறுமல் சத்தத்திலும் நாம் ஒரு நிமிடம் கதிகலங்கி விடுவோம். வாழ்க்கையின் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதை போல் எண்ணம் வரும். உலகத்தில் எந்த ஒரு மனிதனாலும் நம்மை காப்பாற்ற முடியாது என்ற நினைவு வரும். ஏனெனில், சிங்கத்தின் பெலனுக்கு முன்பாக மனிதர்களாகிய நம்முடைய பெலனெல்லாம் ஒன்றும் இல்லை.

அதை பார்க்கும்போதே எப்பேர்பட்ட மனிதனும் தன் மொத்த பெலனையும் இழந்து விடுவான்.உறைந்து போன சிலைப்போல அசைவில்லாமல் ஆடி போய் நின்று விடுவான். அப்பேற்பட்ட பயம் மிகுந்த காட்சி அது.,இன்றைக்கும் பிசாசானவன் நம்மை அநேக முறை இப்படியே பயமுறுத்துகிறான்.அநேக பிரச்சனைகள், நம்மை சில நேரங்களில் சிலை போல அசைவில்லாமல் உறைய செய்கின்றன.ஆனால் பிற்பாடு ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு நமக்கு தெரிய வருகிறது, அந்த சிங்கம் அந்த இடத்தில் கட்டப்பட்டு இருக்கிறதென்று. அந்த சிங்கத்தால் அந்த இடத்தை விட்டு நகர முடியாதென்று வைத்துக்கொள்வோம். வெறும் பார்வையாலும் தன்னுடைய சத்தத்தாலும் மட்டுமே மனிதர்களை பயமுறித்தி, தன்னை ஒரு மிகப்பெரிய பெலசாலியாக காட்டிக்கொள்ளுமே தவிர, மற்றபடி நம்மை தாக்கவோ, நம் உயிரை பறிக்கவோ முடியாது. ஏனென்றால், அது கட்டப்பட்டு இருக்கிறது. அதனால் ஒன்றுமே செய்ய முடியாது. இதை வைத்து தேவன் ஒரு சத்தியத்தை எனக்கு கற்றுக்கொடுத்தார். உண்மையில் நம்மை பயமுறுத்தும் பிசாசும் இந்த கட்டப்பட்ட சிங்கத்தைப் போலவே இருக்கிறான். நம்முடைய ஆண்டவர் இந்த பிசாசை சிலுவையிலே வெற்றி சிறந்தார். இந்த பிசாசுக்கு நாம் நினைக்கிறது போல் பெரிய பெலனெல்லாம் ஒன்றுமேயில்லை. உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று தன்னுடைய சத்தத்தால் நம்மை பயமுறுத்துகிறதே ஒழிய, நீ நிச்சயம் சாகத்தான் போகிறாய், உன் முடிவு என் கையில், இனி உனக்கு எல்லாமே தோல்வி தான், என் பெலத்திற்கு முன்பாக நீயெல்லாம் ஒன்றுமேயில்லை, நீ நம்பின ஆண்டவர் உன்னை நேசிக்கவில்லை, அவர் உன்னை கைவிட்டுவிட்டார், நீ அவருக்காக செய்த காரியங்கள், தியாகங்கள் எல்லாம் ஒண்ணுமேயில்லை என்று அடுக்கடுக்காக பல வார்த்தைகளை பேசி நம் பெலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க செய்யுமே தவிர, மற்றபடி அதற்கு ஒரு பெலனுமில்லை.
சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.சங்கீதம் 91:13
“அவர் (இயேசு கிறிஸ்து) நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்து காத்திடுவார்”.,
வேதம் வசனம் சொல்லுகிறது., உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவர். இப்படித்தான் கோலியாத்தும் தாவீதிடம் பெரிய பெரிய வீரப்பான வார்த்தைகளை பேசினான். ஆனால், கடைசியில் ஒரே ஒரு கல்லில் அத்தனை பெலமிக்கவனாக தன்னை காட்டியவன் ஒரேடியாக சுருண்டு விழுந்து செத்து போனான். ஏனென்றால், தாவீது அன்று தனியாக இருக்கவில்லை.

அவனோடு அவன் நம்பின தேவன் இருந்தார். இன்றைக்கு பிசாசானவன் அநேக நேரங்களில் மனிதர்கள் மூலமாக, இல்லாவிட்டால் அவனே வந்து தன்னை பெரிய பெலசாலியாக காட்டிக்கொண்டு,பெரிய பெரிய வீரப்பான வார்த்தைகளை பேசி, நம்மை சோர்ந்து போய் மொத்த பெலனையும் இழக்க செய்கிறான். சங்கீதம் 2:3,4. கர்த்தர் அவன் பேசுவதை கேட்டு முதலாவது சிரிப்பார். அவருக்கு தெரியும் அவனால் தம் பிள்ளைகளுக்கு, தாம் அபிஷேகம் பண்ணினவர்களை ஒன்றுமே செய்ய முடியாதென்று. சங்கீதம் 2:5 அடுத்ததாக பிசாசின் மேல் கோபங்கொண்டு அவனை கலங்கப்பண்ணுவார். இன்றைக்கு தேவன் நம்முடைய சத்துருக்களை கலங்கப்பண்ண போகிறார்.
2இராஜாக்கள் 18ம் அதிகாரத்தில் சனகெரிப் என்னும் அசீரியா ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு விரோதமாய் படையெடுத்து வருவான்., அவன் உண்மையில் பல சாதனைகள் படைத்தவன் தான்.,பெரிய பிராக்ரமசாலி., மிக திறமையானவன் தான்.,எப்பேற்பட்ட ராஜாக்களையும், ராஜ்ஜியங்களையும் வீழ்த்தக்கூடிய சத்துவம் படைத்தவன்., அதனால் மிக பெருமையுடன் தன் அதிகாரிகளை அனுப்பி எசேக்கியாவையும் இஸ்ரவேல் ஜனங்களையும் மிரட்ட சொல்லுவான். பயங்கரமான ஒரு நிந்தை எசேக்கியாவுக்கு, காதல் கேக்க முடியாத அசிங்கமா வார்த்தைகள்., மிரட்டல்களை விடுவார்கள், சில நேரம் இப்படித்தான் நம் வாழ்க்கையிலும் பிசாசு சில மனிதர்களை அனுப்பி நம் நம்பிக்கையை இழக்க செய்யும்.. அந்த பயத்தில் அந்த அவமானத்தில் நம்முடைய முழு பெலனும் கரைந்து போவது

போல் இருக்கும். ஆனாலும் எசேக்கியா தேவ சமூகத்திற்கு போகிறார். அவன் சொல்லிய அத்தனை வார்த்தைகள், நிந்தைகள், கெட்ட வார்த்தைகள், தூசனங்கள், கொலை மிரட்டல்கள், எல்லாவற்றையும் கர்த்தரிடம் தெரிவித்து அவருடைய வார்த்தைக்காக காத்திருந்தார். பிசாசு யாரிடம் வேண்டுமானாலும் தன்னுடைய வாயின் வார்த்தையிலே அவர்களை பயமுறுத்தி அவர்கள் பெலனை முழுவதுமாய் இழக்க செய்யலாம். ஆனால் உண்மையாய் இயேசு கிறிஸ்துவை நேசிக்கிற, சேவிக்கின்ற தேவ பிள்ளைகளாகிய உங்கள் வாழ்க்கையிலும், என் வாழ்க்கையிலும் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அவன் பேசுகிற எல்லா வார்த்தைகளையும் கேட்டு கொண்டு கர்த்தர் சும்மா இருக்க மாட்டார்.
