“முடிவுக்கு வரும் விடியலுக்கான காத்திருப்பு”..

எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது. (சங்கீதம் 130:6).

பொதுவாக இரவு நேரங்களில் காவல் காப்பவர்கள் எல்லாரும் எப்பொழுது விடியும் என்ற ஆவலோடு இருப்பார்கள். விடியலை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். விடியல் நிச்சயமாக வரும் என்பது அவர்களுக்குத் தெரிந்த விஷயம் தான். ஏனென்றால் இரவுக்குப் பின் கண்டிப்பாக பகல் வரும் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. ஆனால், எப்பொழுது விடியும்? சீக்கிரத்தில் விடியாதா என்ற ஒரு ஏக்கத்தோடு இருப்பார்கள். இதைப் போலவே நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் அநேக வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார். வாக்குத்தத்தங்கள் நிச்சயமாகவே நிறைவேறும் என்பது நமக்கு தெரியும். ஏனென்றால், வேத வசனம் சொல்கிறது, (எண்ணாகமம் 23:19) அவர் பொய் சொல்ல ஒரு மனிதனல்ல மனம் மாற ஒரு மனு புத்திரன் அல்ல. ஆனாலும் இந்த வாக்குத்தத்தங்கள் எல்லாம் எப்போது என்னுடைய வாழ்க்கையில் நிறைவேறும் என்ற ஒரு கேள்வி நம் மனதில் இருக்கிறது. இதைத்தான் (சங்கீதம் 130: 5) ல் நாம் வாசிக்கிறோம். என் ஆத்துமா கர்த்தருக்கு காத்திருக்கிறது. அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன். அவருடைய வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் நான் நம்பி இருக்கிறேன். ஆனாலும், அது எல்லாம் எப்போது நிறைவேறும் என்று விடியல் காலத்திற்கு காத்திருக்கிற அந்த காவலர்களை விட என்னுடைய ஆத்துமா அதிகமாய் காத்திருக்கிறது. இதேபோல் (சங்கீதம் 123:2) ல் வாசிக்கிறோம். இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும் எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.வேலைக்காரர்கள் அந்த சம்பளம் கொடுக்கும் நாளிலே எப்போதும் தங்கள் எஜமானர்களின் கைகளையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். எப்பொழுது நமக்கு சம்பளம் கொடுப்பார்கள் ?இன்றைக்கு சம்பளம் கிடைத்துவிடுமா? கிடைத்துவிடாதா? என்ற

ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதேபோல் இதை வாசிக்கிற நீங்களும் கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை அவர் நிச்சயம் நிறைவேற்றுவாரா இல்லை நிறைவேற்ற மாட்டாரா என்று உங்கள் கண்கள் அவரை நோக்கி ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கலாம். நம்முடைய எஜமான் மனது வைத்தால் நமக்கு இந்த நிமிடத்தில் கூட உடனே சம்பளம் தர முடியும் என்பது அந்த வேலைக்காரர்களுக்கு தெரியும். அதைப்போல் கர்த்தரும் நினைத்தால் நம்முடைய சூழ்நிலை ஒரு நிமிடத்தில் மாற்றிவிட அவரால் முடியும் .
ஆனால், அவர் எப்போது நிறைவேற்றுவார் ? அவர் சொல்லிய வாக்குத்தத்தங்கள் எல்லாம் நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுது நிறைவேறும்? என்ற எண்ணம் நமக்குள் இருக்கிறது. (1 இராஜாக்கள் 18:1) ல் கர்த்தர் எலியாவை பார்த்து : நீ போய் ஆகாபுக்கு உன்னை காண்பி. நான் தேசத்தின்மேல் மழையை கட்டளையிடுவேன் என்றார்.

அதற்கு முன்பு கர்த்தர் எலியாவை ஒளிந்திருக்கும்படி சொன்னார். அதை (1 இராஜாக்கள் 17:3) ல் வாசிக்கிறோம். நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.கர்த்தர் இன்று நம்மை பார்த்து சொல்கிறார்.”நீ போய் உன் பிரச்சனைகளுக்கு உன்னை காண்பி. நான் இப்பொழுது உன் வாழ்க்கையில் ஆசீர்வாதமான மழையை கட்டளையிடப்போகிறேன்”. இனியும் நீ உன் பிரச்சனைகளை கண்டு உன் முகத்தை மறைக்க தேவையில்லை. பிரச்சனைகளை பார்த்து ஓடி ஒழிய ஒரு காலம் உண்டு.

அதே பிரச்சனையை தைரியமாக நேருக்கு நேர் பார்த்து, என் கர்த்தர் என் வாழ்க்கையில் ஆசீர்வாதமான மழையை கட்டளையிடப்போகிறார் என்று சொல்ல ஒரு காலம் உண்டு. கர்த்தர் சொன்ன அந்த வார்த்தையை நம்பி எலியாவும் போகிறார். சில சம்பவங்கள் எல்லாம் நடந்த பின் எலியா ஆகாபை நோக்கி , நீர் போம், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றார். பெருமழை வருவது போல சத்தம் மட்டுமே கேட்டதேயன்றி அது வருவதற்கான எந்த ஒரு அடையாளமும் முதலில் காணப்படவில்லை. இதைப் போலவே நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தர் நான் உனக்கு ஒரு ஆசீர்வாதமான மழையை கட்டளையிடுவேன் என்று வருட துவக்கத்தில் சொல்லியிருக்கலாம். அவர் சொல்லிய அந்த வார்த்தையின் சத்தம் மட்டுமே நம்முடைய காதுகளில் கேட்கிறதே தவிர அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கான எந்த அறிகுறியும் நம்முடைய கண்களால் பார்க்க முடியவில்லை. எப்பொழுது மழை வரும்?இல்லையெனில் நம்முடைய வாழ்க்கையை இன்னும் சில வருடங்களுக்கு இந்த பஞ்சத்தில் தான் கழிக்க வேண்டுமா என்ற சந்தேகம் கூட எழலாம். அன்றைக்கு தேவன் கூறிய அந்த நேரத்தில் பல வருடங்களாக அவர்கள் மழையை பார்க்கவே இல்லை. பஞ்ச காலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இதைப் போலவே நீங்களும் ஒரு பஞ்ச காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். கர்த்தர் உங்களை மிகவும் ஆசீர்வதிக்க போவதாக வாக்குத்தத்தம் கொடுத்திருக்கலாம். அந்தப் பெரு மழையின் இரைச்சலை போல உங்களுடைய காதுகளில் வாக்குத்தத்ததின் வார்த்தை மட்டுமே கேட்கலாம். ஆனால், அது வந்து நிறைவேறுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாதது போல இருக்கலாம். (1 இராஜாக்கள் 18 :43) இல் நாம் வாசிக்கிறோம். எலியா தன் ஊழியக்காரரை பார்த்து சொல்கிறார்: போய் ,சமுத்திரமுகமாய் பார் என்று சொல்கிறார். மழை வருவதற்கான அறிகுறி ஏதாவது தெரிகிறதா என்று பார்க்கச் சொல்கிறார். அதற்கு அந்த ஊழியக்காரன் வந்து ஒன்றும் தெரியவில்லை என்று சொல்கிறான். இப்படித்தான் நாமும் நம்முடைய வாழ்க்கையில் அநேக முறை கர்த்தர் எனக்கு வாக்குத்தத்தத்தை சொல்லி இருக்கிறார். எனவே நிச்சயம் நிறைவேறும் பாருங்கள் என்று அக்கம்பக்கத்தில் இல்லாவிட்டால் உங்கள் குடும்ப உறுப்பினர்களோடு விசுவாசமாய் சொல்லலாம். ஆனால், அவர்கள் வந்து, நீ சொல்லுவது போல் எந்த ஒரு வாக்குத்தத்தமும் நிறைவேறுவதற்கான அறிகுறியே இல்லை என்பது போல சொல்லலாம். ஆனாலும் எலியா சோர்ந்து போகவில்லை. நீ போ, ஏழுதரம் போய் பார் என்று சொல்கிறார். எலியாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை இருந்தது. கர்த்தர் என்னிடம் சொல்லிவிட்டார். நிச்சயம் அது நிறைவேறாமல் போக வாய்ப்பே இல்லை. அதனால் எத்தனை முறையானாலும் சரி, நிச்சயமாக அது நிறைவேறுமென்று. (1 இராஜாக்கள் 18:44) ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான். அந்த வேலைக்காரன் எலியாவின்

சொல்லுக்கு கீழ்ப்படிந்து மறுபடி மறுபடி சோர்ந்து போகாமல், சலித்து போகாமல், முறுமுறுக்காமல், ஒரு நம்பிக்கையோடு போய் பார்த்த போது ஏழாவது முறை அந்த அற்புதம் நிகழ்ந்தது. இன்றைக்கு நீங்களும் கூட ஒவ்வொரு மாதமும் இந்த மாதத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்து விடாதா?அடுத்த மாதத்தில் நிகழ்ந்து விடாதா? என்று பெரிய எதிர்பார்ப்போடு பார்த்து கொண்டேயிருந்திருக்கலாம். ஆறு மாதங்களில் அந்த ஆசீர்வாதம் வருவதற்கு ஒரு சிறிய அறிகுறி கூட நாம் பார்க்க முடியாமல் ஏமாந்து போயிருக்கலாம். ஆனால், இப்பொழுது ஏழாவது மாதத்தில் நுழைந்திருக்கிறோம். இந்த ஏழாவது முறை, ஏழாவது மாதத்தில் நம் வாழ்க்கையில் ஆசீர்வாதமான மழை வருவதற்கான ஒரு சிறிய அறிகுறி, சிறிய அற்புதம் தென்பட போகிறது. (சகரியா 4:10) ல் இப்படி வாசிக்கிறோம். அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார். அந்த வேலைக்காரன் ஏழாம் முறை போய் பார்க்கும் போது ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அளவு மட்டுமே ஒரு மேகம் வருகிறது . இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலும் ஒருவேளை தேவன் நம் கண்களுக்கு முன்பாக ஒரு சிறிய அறிகுறியை மட்டுமே காண்பிக்கலாம், ஒரு சிறிய ஆசீர்வாதம் உங்களுடைய வாழ்க்கையில் எழும்பலாம் .

ஆனால், அது நிச்சயமாக ஒரு பெரும் அலையாக மாறப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . உன் வாழ்க்கையில் நிச்சயமாகவே மழையை கட்டளையிடுவேன் என்று சொன்னவர், நிச்சயமாகவே மழையை அனுப்ப போகிறார்., அந்த சிறிய ஆசிர்வாதம், சிறிய அறிகுறி, சிறிய மேகம் கொஞ்ச நேரத்திலேயே வானம் கறுத்து பெருமழை உண்டாயிற்று. (அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று – 1 இராஜாக்கள் 18:45).

அந்த சிறிய ஆசிர்வாதம் உங்களுடைய வாழ்க்கையில் வந்த கொஞ்ச நேரத்திலேயே தேவன் சொல்லிய அனைத்து வாக்குத்தத்தங்களும் ஒரு பெரும் மழையை போல நம்முடைய வாழ்க்கையில் வர போகிறது. நம்முடைய பஞ்ச காலம் முடிவுக்கு வருகிறது. காலையில் விடியும் போது

சிறிய வெளிச்சம் மட்டுமே முதலாவது வருவது போல நமக்கு தெரியும். கொஞ்ச நேரத்திலேயே அது முழுவதுமாக எல்லா பக்கமும் வெளிச்சமாக பரவி பகலாக மாறிவிடும். அதைப்போலவே நம்முடைய வாழ்க்கையிலும் சீக்கிரத்தில் விடியல் வரப்போகிறது. கண்டிப்பாக நம்முடைய எஜமானர்கள் நமக்கு மாதம் மாதம் சம்பளம் தருவார்கள் என்பது நமக்கு தெரியும் . ஆனால், சில நேரங்களில் அவர்கள் நம்மை பார்க்க தவறி விடுவார்கள் , நமக்குக் கொடுக்க வேண்டுமென்ற ஞாபகம் இல்லாமல் மறந்து விடுவார்கள். ஆனால், நிச்சயமாக நம்முடைய சம்பளம் நம்முடைய கைக்கு வந்து சேரும். மழை அனுப்புவேன் என்று சொன்னவர் நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மழையை அனுப்புவார். இந்த காத்திருப்பு காலம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு பெரிய சோர்வைத் தரும். ஆனாலும், நம்முடைய வாழ்க்கையில் நிச்சயமாக ஒரு விடியல் வரப்போகிறது, ஒரு சம்பளத்தை நாம் பெறப் போகிறோம், ஒரு பெரிய மழையை பெறப் போகிறோம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சிலநேரம் நம்முடைய மனதில் ஏன் என்னுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கு இவ்வளவு காலதாமதம் ஆகிறது? ஏன் என்னுடைய வாழ்க்கையில் விடியல் இவ்வளவு தாமதமாக வருகிறது? ஏன் நான் என் சம்பளத்துக்காக என் எஜமானர்களின் கைகளை இவ்வளவு காலம் நோக்கி பார்க்க வேண்டியிருக்கிறது? ஏன் என்னுடைய வாழ்க்கையில் ஒரு மழை கூட இல்லாமல் இவ்வளவு காலம் பஞ்சகாலமாக இருக்கிறது? இதுபோன்ற கேள்விகள் எழும்பலாம். ஆனால், உலகத்தில் கூட ஒரு வாக்கியம் சொல்வார்கள்.

வெயிலில் இருப்பவர்களுக்கு தான் நிழலின் அருமை தெரியும் என்று. இப்போது தேவன் நம்முடைய வாழ்க்கையிலும் சில நேரம் வாக்குத்தத்தங்களை நம்முடைய வாழ்க்கையில் அனுப்புவதற்கு முன்பாக சில பாடங்களை நாம் கற்றுக் கொள்ள விரும்புகிறார். இருளில் இருப்பவர்களுக்கு தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். அப்போது தான் வெளிச்சம் (விடியல்) நம்முடைய வாழ்க்கையில் வரும்போது நாம் அதை சாதாரணமாக எண்ணாமல், நிச்சயமாகவே தேவனால் மட்டுமே இதுபோன்ற விடியலை என் வாழ்க்கையில் தரமுடியும் என்று கர்த்தரை மட்டுமே நாம் நம்முடைய வாழ்க்கையில் மகிமைப்படுத்துவோம். ஏற்கனவே செழிப்பாக இருப்பவர்களுக்கு மழையின் அருமை தெரியாது. பஞ்சகாலத்தில் வாழ்ந்தால்தான் மழையின் அருமை தெரியும். அது போல, நாம் தேவனுடைய ஆசீர்வாதங்கள் நமக்கு வரும் போது ஏதோ ஒரு சாதாரணமாக நம்முடைய வாழ்க்கையில் அது நிகழ்ந்துவிட்டது என்று நாம் நினைக்காமல், கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே கர்த்தர் அநேக நேரங்களில் இப்படிப்பட்டதான ஒரு எதிர்பார்ப்பின் காலத்தை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார். நாம் இப்படிப்பட்டதான ஆசீர்வாதங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து பெற்றுக்கொள்ளும் போது தான்,

அந்த ஆசீர்வாதம் நம்மிடத்தில் வரும்போது, நம்பிக்கையோடு காத்திருந்தேன், கர்த்தர் அவர் வாக்குத்தத்தம் பண்ணினபடி என்னை ஆசீர்வதித்தார் என்று அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவோம் . நாம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக அந்த ஆசீர்வாதம் மிகச்சுலபமாக நமக்குக் கிடைத்துவிட்டால் அந்த ஆசீர்வாதங்களையும் அந்த ஆசீர்வாதத்தை தந்த கர்த்தரையும் நாம் அவ்வளவு தூரம் மதிக்க மாட்டோம். ஏதோ சாதாரணமாக நிகழ்ந்த நிகழ்வாக மட்டுமே கருதுவோம்.

எனவே, தேவன் நம்மை நடத்தி வருகிற ஒவ்வொரு வழிகளுக்காக நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். இரவு என்று ஒன்று வந்தால் அடுத்து பகல் என்பது வரும் என்பது உலக நியதி. அதைப்போல் நிச்சயம் சீக்கிரத்தில் நம்முடைய வாழ்க்கையில் ஒரு விடியலை தேவன் தரப்போகிறார். சாதாரணமான ஒரு மழையாக இல்லாமல் ஒரு பெருமழையின் சத்தம் நம்முடைய வாழ்க்கையில் கேட்கப்போகிறது. சத்தம் கேட்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அந்த பெரும் மழையை நம்முடைய கண்களால் காணப்போகிறோம்.

தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக. (ஆதியாகமம் 27:28)


கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.