”பாட்டியால் பேரனுக்கு மேன்மை.,பேரனால் பாட்டிக்கு மேன்மை”

முதலாவது பாட்டியால் பேரனுக்கு எப்படி மேன்மை கிடைத்தது என்பதை பார்ப்போம். நம்முடைய வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் ரூத் புத்தகத்தை நாம் யாவரும் அறிவோம். இதில் நகோமி,ரூத்,போவாஸ் முக்கிய நபர்களாக இருப்பார்கள். ஆனால் நாம் இங்கு பார்க்க போவது நகோமி-ஓபேத் பற்றி பார்க்கப்போகிறோம். இந்த ஓபேத்,ரூத்-போவாஸின் மகன், நகோமிக்கு பேரனாகிறான். இந்த ஓபேத் பிறந்த போது ஸ்திரீகள் நகோமியை

இப்படியாக வாழ்த்தினார்கள். (அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.

அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்-ரூத் 4:14,15).இவனுக்கு அயல்வீட்டுக்காரிகள் ஓபேத் என்று பேரிடுகிறார்கள். இந்த ஓபேத் தாவீது ராஜாவின் தந்தையாகிய ஈசாயைப் பெறுகிறான், ஆக இந்த ஓபேத் தாவீது ராஜாவுக்கு தாத்தாவாகிறான். தாவீது ராஜாவின் வம்சத்தில்தான் உலக இரட்சராகிய இயேசு கிறிஸ்து பிறக்கிறார். வேதாகமத்தில் இந்த ஓபேத் பற்றி நாம் அதிகம் படிக்காவிட்டாலும் இவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் வம்ச அட்டவணையில் இடம் பெறுகிறார். (மத்தேயு 1:5,6 ,லூக்கா 3:32). இது இவருக்கு கிடைத்த பெரிய மேன்மையாகும். இதற்கு முக்கிய காரணமாக செயல்பட்டவர் இவருடைய பாட்டியாகிய நகோமி ஆகும். இந்த நகோமியின் முன்சரித்திரத்தை பார்ப்போமானால், தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டதினால் இவர்கள் பஞ்சம் பிழைப்பதற்காக

பெத்லகேமிலிருந்து அந்நிய தேசமாகிய மோவாப்பிற்கு போய் அங்கே இருந்து விடுகிறார்கள். இப்போது அங்கே நகோமியின் புருஷன் எலிமெலேக்கு இறந்து விடுகிறான். நகோமியும் அவன் குமாரரும் அங்கே இருந்து அவர்களுக்கு மோவாபியரிலேயே பெண்கொள்கிறார்கள். அவர்கள் பெயர் ஒர்பாள், ரூத். அவர்கள் அங்கே போய் ஏறக்குறையப் பத்து வருடங்கள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் நகோமியின் குமாரராகிய மக்லோனும் கிலியோனும் இறந்துவிடுகிறார்கள். இந்த இக்கட்டான காலகட்டத்தில் கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு பஞ்சம் நீங்க ஆகாரம் அருளினார் என்று கேள்விப்பட்டு, தன் சொந்த தேசத்திற்கு போகவேண்டுமென்று முடிவெடுக்கிறாள். இந்த முடிவே அவள் வாழ்க்கையில் திருப்புமுனையாய் அமைகிறது. அவள் தன் கணவனை இழந்து தன் இரு ஆண்மக்களையும் இழந்து இருதயத்தில் வேதனை, மனதில் பல கேள்விகள் இருந்தும் தன் சொந்த தேசத்திற்கு திரும்ப புறப்படுகிறாள். நாமும் இதே போல் வாழ்க்கையில் இழப்புகள், தோல்விகள் வரும்போது ஒரு தெளிவான முடிவெடுக்கமுடியாமல் அடுத்த பகுதிக்கு செல்ல முடியாமல் இருந்த இடத்திலே இருந்து சோர்வடைந்துவிடுகிறோம். நாம் நம் சூழ்நிலையை பார்க்காமல் அடுத்த பகுதிக்கு செல்ல விசுவாசத்தோடு ஒரு அடி எடுத்து வைக்கும்போது தேவன் நம் கரம்பிடித்து எதிர்கால ஆசீர்வாதத்திற்குள் வழி நடத்துகிறார். நகோமி தன் சொந்த தேசத்திற்கு புறப்படும்போது தன் இரு மருமக்களையும் பார்த்து நீங்கள் உங்கள் தாய்வீட்டுக்குப் போங்கள் என்று கூறுகிறாள். அப்பொழுது அவர்கள் இருவரும் சத்தமிட்டு அழுகிறார்கள். ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டு திரும்ப போகிறாள். ரூத்தோ தன் மாமியை விடாமல்ற்றிக்கொள்கிறாள்.

இப்படியாக இருவரும் பெத்தேல்மட்டும் நடந்தே வருகிறார்கள். அவர்களை குறித்து ஊரார் எல்லோரும் ஆச்சரியப்பட்டு இவள் நகோமியோ என்று பேசிக்கொள்கிறாள். (அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.

நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள்- ரூத் 1:20,21). பின்பு ரூத் கதிர் பொறுக்க வயல்வெளிக்கு செல்கிறாள். அது தற்செயலாய் போவாசுடைய நிலமாயிருந்தது. போவாஸ் அவளை நன்கு விசாரித்தான்.

(அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புறவிழுந்து வணங்கி: நான் அந்நிய தேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள். அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது. உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்-ரூத் 2:10,11,12).

அவள் போவாசின் நிலத்திற்கு தற்செயலாய் போனது நகோமிக்கு தெரிய வரும்போது அவன் நம்முடைய உறவினர் என்று ரூத்திடம் சொல்கிறாள்.

(பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ? – ரூத் 3:1). பின்பு நகோமி இந்த வாய்ப்பை தவறவிடாமல் போவாசிடம் திருமணம் பற்றி பேசுவதற்கான சில யுக்தியை ரூத்திற்கு கற்றுக்கொடுக்கிறாள். ரூத் 3ஆம் அதிகாரத்தில் நீங்கள் அதை பார்க்கலாம். அதன்படியே ரூத்தும் கீழ்ப்படிந்து செய்கிறாள். அப்போது போவாஸ் ரூத்திடம் (“நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான். இராத்திரிக்குத் தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம் பண்ண மனதில்லாதிருந்தானேயாகில், நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலமட்டும் படுத்துக் கொண்டிரு என்றான்-ரூத் 3:12,13).

இறுதியில் ரூத் – போவாஸ் திருமணம் முடிவு செய்யப்படுகிறது. இதிலிருந்து நாம் இன்னுமொரு காரியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். ரூத் கதிர்பொறுக்க வயல்வெளிக்கு சென்றதால்தான் பின்னாளில் அந்த வயலுக்கே அவளை எஜமானியாய் தேவன் மாற்றுகிறார். நாமும் கூட நமக்கு கிடைக்கிற சிறு சிறு சந்தர்ப்பங்களை தட்டாமல் செய்யும்போது தேவன் நம் பிரயாசத்தைப் பார்த்து உயர்ந்த இடத்தில் வைப்பார். இந்த இடத்தில் நெருங்கின சுதந்திரவாளி தனக்கு கிடைத்தை வாய்ப்பை தவறவிட்டுவிடுகிறான். ஆனால் போவாஸ் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய சந்ததியில் ஓபேத்தை பெறுகிறான். இந்த ஓபேத்தை பெறுவதற்கு முக்கிய பங்காற்றியது

நகோமி. நாமும் கூட நம்மால் நம்முடைய சந்ததி மேன்மையடைய பிரயாசப்பட வேண்டும்.

முதலாவது பாட்டியால் பேரனுக்கு மேன்மைபற்றி பார்த்தோம். இரண்டாவதாக பேரனால் பாட்டிக்கு மேன்மை என்பதைப் பற்றி பார்ப்போம். வேதாகமத்தில் தீமோத்தேயு குறித்து நாம் அறிவோம். இவரை பவுல் தன் சொந்த குமாரனாகவே நினைத்து பல இடங்களில் கூறுகிறார்.

விசுவாசத்தில் உத்தம குமாரன்,பிரியமுள்ள குமாரன் என்றெல்லாம் குறிப்பிடுகிறார். பவுல் கட்டுண்டவனாய் இருந்த பல கால கட்டங்களில் இவர் பவுலுக்கு பல விஷயங்களில் கூடவே இருந்து கஷ்டங்களை சகித்து உதவி செய்ததாக குறிப்பிடுகிறார். பவுலுக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது. எப்படியென்றால், அவர் ஒரு சபைக்கு நிருபம் எழுதும்போது தன்னோடுகூட யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் பெயரையும் சேர்த்து “எழுதுகிறதாவது” என்று ஆரம்பிப்பார். அப்படியே நிருபத்தை முடிக்கும்போதும் தன்னோடு கூட இருக்கும் ஒவ்வொருவருடைய பெயரை கூறி இவர்கள் எல்லோரும் உங்களை வாழ்த்துகிறார்கள் (விசாரிக்கிறார்கள்) என்று கூறி முடிப்பார். ஒவ்வொரு பட்டணத்தில் இருக்கும்

ஒவ்வொரு விசுவாச குடும்பத்தாரையும் நன்றாக அறிந்து வைத்திருப்பார். இந்த வகையில் தான் தீமோத்தேயுக்கு இருந்த மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூறுகிறார். இந்த விசுவாசம் இவனுக்கு எப்படி வந்தது என்று குறிப்பிடுகிறார். (உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன் . அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன். – 2 தீமோத்தேயு 1:4,5).

இந்த வகையில் பேரனாகிய தீமோத்தேயுவினால் பாட்டியாகிய லோவிசாள் பெயர் வேதாகமத்தில் இடம்பெறுவது பாட்டிக்கு கிடைத்த பெரிய மேன்மையாக பார்க்கிறோம். இவர்களின் குடும்ப பின்னணியை நாம் பார்க்கும்போது தீமோத்தேயுவின் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன் என்று பார்க்கிறோம். (அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான் அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன். – அப்போஸ்தலர் 16:1). அவனுடைய தகப்பன் புறஜாதியாகிய கிரேக்கனாய் இருந்தாலும் அவனுடைய தாயும் பாட்டியும் அவனை நல்ல ஒரு விசுவாசத்தில் வளர்த்ததினால் அவன் மூலமாய் இவர்கள் பெயரும் வேதாகமத்தில் இடம் பெறுகிறது. நம்மில் பலர் இப்படி சொல்வதுண்டு. என்னுடைய கணவர் சரியில்லை, அவர்கள் நன்றாக இருந்திருந்தால் எங்கள் பிள்ளைகளை, எங்கள் சந்ததியை நன்றாக வளர்த்திருப்போம் என்று. ஆனால் பரி.பவுல் தீமோத்தேயுவின் தகப்பனைப் பற்றி கூறாவிட்டாலும் அவனுடைய பாட்டி, தாயின் விசுவாசத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். ஆதலால் நம்முடைய குடும்பங்களில் நாம் ஒருவர் மட்டும் இரட்சிக்கப்பட்டு விசுவாசமுள்ளவர்களாய் இருந்தால், நம்முடைய சந்ததியையும் விசுவாசமுள்ளவர்களாய் வளர்த்து அவர்கள் மூலமாக நாமும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக தீமோத்தேயுவின் பாட்டி, தாயைப் போல மேன்மையடையலாம் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.