பைபிளை எப்படி புரிந்து வாசிப்பது?.(பகுதி 1)ல் நாங்கள் குறிப்பிட்ட அந்த 20 புத்தகங்களையும் படித்து முடித்தபின்பு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய 14 நிருபங்களை படிக்கலாம். பவுல் என்பவர் யார் என்றால் புதிய ஏற்பாட்டில் அவர் ஒரு பெரிய ஊழியக்காரர்., அவர் ஒரு அப்போஸ்தலர், அவர் அநேக கிராமத்திற்கு சென்று சுவிசேஷத்தை அறிவிக்க செல்லுவார். அங்கே போய் வந்த பின்பு அங்கே உள்ள சபைகளுக்கு கடிதங்கள் எழுதுவார். அந்த கடிதங்கள் தான் இப்பொழுது நாம் படிக்க போகிற இந்த நிருபங்கள்.
(ரோமர்),

(1 கொரிந்தியர்)
(2 கொரிந்தியர்),
1 மற்றும் 2 கொரிந்தியர் இல் சிலுவையைப் பற்றிய உபதேசம் உள்ளது. சிலுவையைப் பற்றிய உபதேசம் என்னவென்றால் ஆண்டவருடைய இரத்தத்தை பற்றியும் அதனுடைய விசேஷங்கள் பற்றியும் இரத்தத்தால் வரும் ஆசீர்வாதங்கள் பற்றியும் பவுல் அதில் விரிவாக சொல்லி இருப்பார்.
அடுத்ததாக ஆலயம் பொதுவாக நம் சபையை மட்டுமே ஆலயம் என்று எண்ணி இருப்போம் ஆனால் பவுல் நம்மையே ஆலயம் என்று சொல்லுகிறார். எப்படி ஆலயத்தை பரிசுத்தமாக வைக்கவேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதே போல நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் மிகவும் பரிசுத்தமாக காக்க வேண்டும் என்று மிகத் தெளிவாக எழுதியிருப்பார்.
அடுத்ததாக அந்நிய பாஷைகள், வரங்கள், தீர்க்கதரிசனங்கள், இதையெல்லாம் விளக்கி இருப்பார். அன்பைக்குறித்து தனி அதிகாரத்தை எழுதி இருப்பார்.
மரணபயத்தில் வாழ்கிறவர்கள் அதை எப்படி ஜெயிக்க வேண்டும் என்று தெளிவாக எழுதி இருப்பார். மற்றும் ஆவி ஆத்துமா சரீரத்தில் வருவதான பிசாசுனுடைய போராட்டங்களில் இருந்து நாம் எப்படி ஜெயம் வாங்குவது என்று தெளிவாக எழுதி இருப்பார்.
(கலாத்தியர்),
கலாத்தியர் இல் எல்லாத்துறையிலும் ஒரு போலித்தன்மை இருப்பது போல நம்முடைய கிறிஸ்துவத்திலும் அந்தக் காலத்திலிருந்தே இந்தப் போலித்தன்மை இருக்கிறது அதனால் நல்ல உபதேசம் என்றால் எப்படி இருக்கும், கெட்ட உபதேசம் என்றால் எப்படி இருக்கும் என்று எழுதி இருப்பார். கெட்ட உபதேசமே இருந்தாலும் நாம் அதில் நுழையாமல் எப்படி தப்பிப்பது பற்றியும் நாம் அதில் வாசிக்கலாம். நல்ல குணங்கள் பற்றியும், கெட்ட குணங்கள் என்ன என்பது பற்றியும் கிறிஸ்தவ வாழ்க்கையில் நம் இருதயத்தை நாம் எப்படி ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும் வாசிக்கலாம்.
(எபேசியர்),
இந்தப் புத்தகத்தில் நாம் கர்த்தருடைய கிருபையால் எப்படியெல்லாம் அழைக்கப்பட்டோம் என்பது பற்றியும் பாவத்தை விட்டு எப்படி வெளியே வந்தோம் என்பது பற்றியும் இயேசுகிறிஸ்துவினுடைய ரத்தத்தையும், அந்த பரிசுத்த ரத்தத்தை நம்புவதால் நமக்கு கிடைக்கும் பயனையும், இந்த வாழ்க்கை பயணத்தில் நாம் எப்படி நடக்க நடக்க வேண்டும் என்பது பற்றியும் வாசிக்கலாம்.
புதிதாக நீங்கள் இரட்சிக்கப்பட்டு சபைக்கு உள்ளே போனால் மற்ற விசுவாசிகளோடு எப்படி பழக வேண்டும் என்பது பற்றியும், ஊழியர்களோடு எப்படி ஐக்கிய வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் இதில் எழுதி இருப்பார்.
பாவத்தை விட்டு நீங்கள் வெளியே வரும்பொழுது பாவம் செய்த நபர்களோடு அல்லது நண்பர்களோடு மறுபடியும் சேர்ந்து விடாதீர்கள் என்பது பற்றியும் எழுதி இருப்பார். அடுத்ததாக ஒரு கணவன் மனைவிக்குள் என்ன உறவு இருக்க வேண்டும் என்பது பற்றியும் கிறிஸ்து எப்படி சபையை நேசிக்கிறாரோ அதேபோல் கணவனும் மனைவியும் நேசிக்க வேண்டும் என்று பேசி இருப்பார். பிசாசின் போராட்டங்கள் என்ன என்பது பற்றியும் அவற்றிலிருந்து நாம் எப்படி விடுதலையாக வேண்டும் என்பது பற்றியும் கிறிஸ்தவர்களுக்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எழுதி இருப்பார்.
(பிலிப்பியர்),
இந்தப் புத்தகத்தில் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலைகளில் இருந்தாலும் நாம் எப்படி சந்தோசமாக வாழ வேண்டும் என்பது பற்றியும் எழுதி இருப்பார். முக்கியமாக கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்த, உயர்வுகள் தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையாகும், அதை நாம் எப்படி சந்தோசமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெளிவாக எழுதி இருப்பார். பவுல் என்பவர் அதிகம் வசதி படைத்தவராக நல்ல ஞானம் நிறைந்தவராக இருந்தபோதிலும் இயேசு கிறிஸ்துவுக்காக எப்படி அவமானப்பட்டார் அடிகள் பட்டார் என்பது பற்றியும் நாம் ஆண்டவருக்காக எதையாவது தியாகம் செய்ய வேண்டும் என்பது பற்றியும் பணம் பொருள் அல்லது நம்முடைய வாழ்க்கையை ஆண்டவருக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் சொல்லி இருப்பார். அதை செய்யும் பொழுது அதை மிகவும் சோர்வாக செய்யாமல் சந்தோசத்தோடு அந்தத் தியாகத்தை ஆண்டவருக்காக நாம் செய்ய வேண்டும் என்பது பற்றி அதில் தெளிவாக எழுதி இருப்பார்.
(கொலோசெயர்),
இது ஒரு சிறிய புத்தகம் இதில் இயேசு எதற்காக சிலுவையில் அறையப்பட்டார் என்பது பற்றியும், அவருடைய ரத்தம் நமக்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதங்களை கொண்டு வருகிறது என்பது பற்றியும் எழுதி இருப்பார். முக்கியமாக இயேசு கிறிஸ்து யார் என்பது பற்றியும் அவரை அறிந்து கொண்டால் நமக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பது பற்றியும் சொல்லி இருப்பார்.
அடுத்து நம்முடைய பழைய வாழ்க்கையிலிருந்து கிறிஸ்துவுக்குள் எப்படி புதிய மனிதனாக மாற வேண்டும் என்பது பற்றியும் தெளிவாக எழுதி இருப்பார்.
(1 தெசலோனிக்கேயர்),
இந்த புத்தகத்தில் நாம் எப்படி எல்லாம் கர்த்தருக்கு பிரியமாக பரிசுத்தமாக வாழ வேண்டும் என்றும் அவருடைய ரகசிய வருகை எப்படி இருக்கும் என்றும் அதற்கு நாம் எப்படி ஆயத்தமாக வேண்டும் என்பது பற்றியும் எழுதி இருப்பார்.
(2 தெசலோனிக்கேயர்),
இந்த புத்தகத்தில் எல்லாத்துறையிலும் போலித் தன்மை இருப்பது போல் உபதேசத்தில் போலித்தன்மை அந்த காலத்திலே வந்துவிட்டது இதற்கு எல்லாம் எப்படி நாம் விலகி இருக்க வேண்டும் என்பது பற்றியும் அந்திக்கிறிஸ்து என்பவன் எப்படி வருவான் என்பது பற்றியும் பவுல் ஆகிய இவருடைய வாழ்க்கையில் ஊழியத்தில் எவ்வளவு கஷ்டங்கள் பட்டார் என்பது பற்றியும் எப்படி கர்த்தருக்காக கடினமாக உழைத்தார் என்பது பற்றியும் இதில் எழுதி இருப்பார். இதேபோல் இருதயத்தில் உள்ள கெட்ட குணங்களை விட்டு பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று விரிவாக எழுதி இருப்பார்.
(1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து),

தீத்து, தீமோத்தேயு என்பவர்கள் பவுலுக்கு உதவியாக ஊழியம் செய்தவர்கள் இந்த இரண்டு இளம் ஊழியர்களுக்கும் அவர் அறிவுரை கூறி எழுதுகிறார். முக்கியமாக ஊழியம் பண்ணுகிறவர்களும் ஊழிய வாஞ்சை இருப்பவர்களும் இந்த நிருபங்களை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
சபையில் உள்ள மூப்பர்கள் சபைக்கு வருகிறவர்களை எப்படி விசாரிக்க வேண்டும், அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் இதில் வாசிக்கலாம்.
விசுவாசிகளும் ஆண்கள் எப்படி இருக்க வேண்டும், பெண்கள் எப்படி இருக்க வேண்டும், வயதான ஆண்கள், பெண்கள், இளம் ஆண்கள், இளம் பெண்கள் இவர்கள் எல்லோரும் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எழுதி இருப்பார். ஊழியர்கள் சபையில் யாரை சேர்த்துக்கொள்ளவேண்டும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது பற்றியும், சபையில் என்ன ஒழுங்குமுறை இருக்கின்றது என்பது பற்றியும் எழுதியிருப்பார். ஊழியர்கள் யாரை கனம் பண்ண வேண்டும், யாரை கணம் பண்ணக்கூடாது, யாரை விசாரிக்க வேண்டும் யாரை விசாரிக்கக்கூடாது, பிரசங்கம் எப்படி எல்லாம் பண்ண வேண்டும் இதையெல்லாம் பற்றி விரிவாக எழுதி இருப்பார்.
(பிலேமோன்),
இந்த புத்தகத்தில் முன்னதாக தவறு பண்ணினவர்கள் இப்பொழுது மனம் திரும்பி வந்தால்.. அவர்களுக்கு இரண்டாவதாக வாழ்க்கையில் நாம் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் தெளிவாக எழுதி இருப்பார்.
(எபிரெயர்),
இந்த புத்தகத்தை பவுல் தான் எழுதி இருப்பார் என்று சரியாக சொல்ல முடியாது ஆனால் இந்த எழுத்து வடிவங்களை வைத்து ஒரு சில வேத ஆராய்ச்சியாளர்கள் பவுல் தான் எழுதினார் என்று சொல்லுகிறார்கள். இதில் தேவதூதர்களை பற்றியும், தேவதூதர்களை விட மனிதர்கள் எவ்வளவு விசேஷித்தவர்கள் என்பது பற்றியும், மனிதர்களுக்கு எந்த அளவுக்கு இரட்சிப்பு இருக்கின்றது என்பது பற்றியும், ஆசீர்வாதங்கள் பற்றியும், விரிவாக எழுதி இருப்பார். கர்த்தருக்குள் இருக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கை எந்த அளவுக்கு இளைப்பாறுதல் ஆக இருக்கும் என்பது பற்றியும், பழைய ஏற்பாட்டில் உள்ள பரிசுத்தவான்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, அவர்களை நாம் நம்முடைய வாழ்க்கையில் உதாரணமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும், அவர்களை பார்த்து நாம் எப்படி நம்முடைய கஷ்டங்களை கடந்து வரவேண்டும் என்பது பற்றியும், நாம் தவறு செய்யும்பொழுது உலகத்திலுள்ள பெற்றோர்களே நம்மை கண்டித்து திருத்துவார்கள் அதேபோல ஆண்டவரும் நமக்கு சிட்சையை தரும்பொழுது அதை நாம் ஏற்றுக் கொள்ளும் போது அது நமக்கு நன்மையாக மாறும் என்பது பற்றியும், நம்முடைய ஊழியர்களை துக்கப்படுத்த கூடாது என்பது பற்றியும், எழுதி இருப்பார். சில விரோதமான செய்கைகள் செய்யும்பொழுது ஆண்டவரும் துக்கப்படுவார் ஊழியர்களும் துக்கப்படுவார்கள்.
நியாயப் பிரமாணங்கள் பற்றி விரிவாக எழுதி இருப்பார். நியாய பிரமாணங்கள் என்றால் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வருவதற்கு முன்பு நாம் தப்பு செய்தால் உடனே தண்டனை கிடைக்கும். இல்லாவிட்டால் ஆடு, மாடுகளை பலியிட வேண்டும் ஆனால் கிறிஸ்துவின் பிரமாணம் என்பது அவரிடத்தில் இரக்கம், சமாதானம், நம்பிக்கை, ஐக்கியம், அன்பு இவைகள் எல்லாம் கிடைக்கும்.
முக்கியமாக இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் நியாய பிரமாணத்திலிருந்து, கிறிஸ்துவின் உபதேசத்திற்கு உடனே வருவதற்கு சிரமப்பட்டார்கள் அதனால் தனித்தனியாக பிரித்து சொல்லியிருப்பார்.
அதன்பின்பு ஆவியானவர் நம்மை எப்படியெல்லாம் நடத்துகிறார் என்பது பற்றியும் இயேசு கிறிஸ்து யாருக்கு இரக்கம் காட்டுவார் யாருக்கு இரக்கம் காட்ட மாட்டார் யார் மேல் தயவாக இருப்பார் யார் மேல் தயவாக இருக்க மாட்டார் யாரை கண்டிப்பார் யாரை கண்டுக்க மாட்டார் இதையெல்லாம் பற்றி விரிவாக எழுதி இருப்பார். முக்கியமாக எல்லா நிறுவனங்களிலும் பவுல் விக்கிரகம் விபச்சாரம் காமவிகாரம் இதையெல்லாம் விட்டு நாம் வெளியே வரவேண்டும் என்றும் சபைக்கு வந்த உடனே நாம் வெளிப்பிரகாரம் ஆக பாவங்களை விட்டு விடுவோம் ஆனால் இருதயத்திற்குள் நிறைய பாவங்களை வைத்திருப்போம் அதனால் இந்த இருதயம் சம்பந்தப்பட்ட காரியங்களை இந்த நிருபங்களில் அதிகமாக எழுதி இருப்பார்.
மேலே சொன்ன புத்தகங்கள் மட்டுமல்லாமல் இன்னும் மீதியான புத்தகங்களை எப்படி புரிந்து படிக்கலாம் என்பது பற்றி அடுத்த பகுதியில் படிக்கலாம்.
கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக.,
கர்த்தருடைய கிருபை உங்கள் அனைவரோடுகூட இருப்பதாக ஆமென்..