தேவனுடைய கிரியைகள் உன் வாழ்வில் வெளிப்படப்போகிறது!!!

அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.(யோவான் 9:1-3)

சில நேரம் நமக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நம் உடம்பிலும் குடும்பத்திலும் சில பிரச்சனைகள் இருக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூட ஏதோ ஒரு குறை நம்மிடம் உள்ளதாக நினைத்து கொள்வார்கள், இல்லாவிட்டால் நம் முன்னோர்கள் செய்த பாவத்தினால் விட்ட சாபம் தான் நாம் இப்படி இருக்கிறோம் என்று கூறுவார்கள்.. நம்முடைய மனதிலும் இப்டிப்பட்டதான நினைவுகள் வரும். ஏன் எல்லாருக்கும் இருப்பது போல எனக்கு ஒரு நல்ல இயல்பான வாழ்க்கை அமையவில்லை. சில பேர் இப்படி சொல்லி கூட நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். எப்படி தான் மற்ற மனிதர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து நான் சந்தோஷமாக ஒரு முறை கூட சிரித்ததில்லை என்று.இதே போல் தான் இந்த குருடனும் விவரம் தெரிந்த நாள் முதல் அவன் இந்த உலகத்தை பார்த்ததே இல்லை, இந்த உலகத்தில் எவ்வளவோ அழகான விஷயங்கள் உள்ளது. அது எதையும் அவன் பார்த்ததும் இல்லை,அனுபவித்ததும் இல்லை. இதே போல் நம்மில் அநேகருக்கு, சிறு வயதில் மற்ற எல்லாருக்கும் இருந்தது போல் உங்கள் வாழ்க்கை அமையாமல் இருந்திருக்கலாம்.இல்லாவிட்டால் எல்லாரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால், நானோ எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இந்த வியாதியுடன் போராடி கொண்டிருக்கிறேன் . எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை என்று நினைத்து கொண்டிருக்கலாம்.அன்றைக்கு அந்த குருடனுக்கு தெரிந்ததெல்லாம் இருட்டு மட்டுமே.அவன் வெளிச்சத்தை பார்த்ததே இல்லை.

அடுத்ததாக அவனுக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவன் செய்த ஒரே ஒரு செயல்,பிச்சை எடுப்பது மட்டுமே.அவனோடு பிறந்த வயதில் உள்ளவர்கள் எல்லாரும் அடுத்த அடுத்த நிலைமைக்கு வளர்ந்திருப்பார்கள், படிப்பு படித்திருப்பார்கள், வேற தொழில் செய்ய ஆரம்பித்திருப்பார்கள், சொத்து சேர்த்திருப்பார்கள், வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருப்பார்கள். இவனோ, ஒரு தேங்கிய குளம் போல ஒரே நிலைமையில் இருந்தான்.. இவனால் அடுத்த கட்டத்துக்கு நகர முடியவில்லை. ஒரு வேளை, இந்த குருடன் நம்முடைய வாழ்க்கை தரத்தை மாற்ற வேண்டும், மற்றவர்களை போல் முன்னேர வேண்டும் என்று முயற்சி கூட எடுத்திருக்கலாம்.ஆனால் இவனால் இயலாமையின் காரணமாக, உடலில் பெலன் இல்லை,கையில் பணம் இல்லை, அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்க்கே இவனுக்கு சிரமாக உள்ளது.

இதே போல் உங்களுக்கும் உங்கள் எதிர்கால வாழ்க்கை பற்றி பல கனவுகள் இருக்கலாம்..

உங்கள் குடும்பம் பற்றி, தொழில் பற்றி, பிள்ளைகள் பற்றி, ஊழியத்தை பற்றி, திறமைகள் தாலந்துகள் இருந்தாலும், வசதிகள் இல்லாததால், கையில் பணம் இல்லாததால், உடலில் உள்ள பெலவீனத்தால், அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாத சூழ்நிலையில் நீங்கள் சிக்கி தவிக்கலாம்.ஆனால் கர்த்தர் ஒருபோதும் நம்மை கைவிடுவதே இல்லை .வேத வசனம் சொல்கிறது.

(எண்ணாகமம் 24 :5-6) யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப் போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது. இஸ்ரவேலின் கூடாரங்கள் பரவி போகிற ஆறுகளை போல் இருக்குமாம்.

இப்படியான ஒரு ஆசீர்வாதத்தை தான் தேவன் இன்று தர விரும்புகிறார். குளம் தான் தேங்கி கிடக்கும், ஆனால் ஆறு அப்படி இல்லை. எப்போதும் அது பரவி ஓடி கொண்டே இருக்கும். தேவன் நம்மை ஒரு குளத்தை போல் இல்லை,ஒரு ஆற்றை போல் ஆசிர்வதிக்கவே விரும்புகிறார். எங்கள் குடும்பத்தில் எப்போதெல்லாம் எல்லா விஷயங்களும் ஒரு தேக்கத்தில் இருப்பது போல் நான் உணருகிறேனோ, அப்போதெல்லாம் இந்த பாடல் வரிகளை தான் நான் விசுவாசத்தோடு பாடுவேன். அநேக முறை எங்கள் சூழ்நிலையை கர்த்தர் மாற்றி இருக்கிறார்..

“உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்.

நீ பரவி போகிற ஆறாய் மாறிடுவாய்,

உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் மாற்றுவேன்”

எவ்ளோ நாள் தான் இப்படி ஒரு சிறையிருப்பில் வாழ்வது,எவ்ளோ நாள் தான் இன்னொருவர் கீழ் அடிமை போல் இருந்து வேலை செய்வது,எவ்ளோ நாள் தான் ஓடாத தொழிலை செய்வது,எவ்ளோ நாள் தான் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, திருமணத்திற்காக எவ்ளோ நாள் தான் காத்திருப்பது,இன்னும் எவ்ளோ நாள் தான் இந்த வாடகை வீட்டில் வாழ்வது, இப்படி அநேகமாயிரமான கேள்விகள் உங்கள் மனதில் எழும்பலாம் .இதில் நமக்கு தெரிந்தவர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், சில நேரம் நம் துக்கத்தை அதிகப்படுத்துவார்கள்.. ஆனாலும் நம்மை முழுமையாய் அறிந்தவர் நம் தேவன் மட்டுமே. இதை தாவீது சவுலுக்கு பயந்து ஒரு குகைக்குள்

இருக்கும்போது எழுதுகிறார்..குகை என்றாலே ஒரே இருட்டு தான் ..அங்கே நாம் பெரிய வெளிச்சத்தை எதிர்பார்க்க முடியாது , ஏன் சாதாரணமாக நடமாட கூட வெளிச்சம் இருக்குமா என்று தெரியவில்லை.அப்போது தான் இதை எழுதுகிறார்..

(சங்கீதம் 142:3) என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணி வைத்தார்கள். அவருடைய ஆவி தியங்குகிறது.இப்பொது இந்த குகைக்குள் இருந்து இவரால் வெளியே வர முடியவில்லை.வந்தால் உயிர் போய்விடும்.ஒரு காலத்தில் கோலியாத்தை வென்று பெரிய வீரனாக திகழ்ந்தவர், இப்பொது இருட்டுக்குள் முடங்கி கிடக்கிறார். ஆனாலும், நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர் என்று சொல்கிறார்.ஒரு வேளை, நீங்களும் இப்படிபட்டதான ஒரு குழப்பத்தில் இருக்கலாம்..அடுத்ததாக போக வேண்டிய பாதை தெரியாமல் இருக்கலாம்.ஆனால் தேவன் நம் பாதையை அறிந்திருக்கிறார்.அன்றைக்கு அந்த சீஷர்கள் கேட்ட கேள்விக்கு தேவன் பதில் அளிக்கிறார்.இது யார் செய்த பாவமும் இல்லை..என்னுடைய கிரியைகள் இது மூலமாக, இவன் குருடாய் இருப்பதால் வெளிப்படப்போகிறது என்று.. (யோவான் 9: 6-7)

இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பி வந்தான்.

தேவன் அவனை குணமாக்கினார். இப்பொழுது அவனுக்கு தான் போக வேண்டிய பாதை தெரிகிறது. இனி ஒருபோதும் அவன் ஒரே இடத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு குளம் போல ஒரே இடத்தில் அவன் வாழ்க்கை இனிமேல் இருப்பதில்லை. இப்பொழுது அவன் ஒரு ஆற்றை போல் பரவி அங்கும் இங்கும் போகிறான்.அவன் இதுவரை பார்க்காத விஷயங்களை,இந்த உலகத்தில் தேவன் படைத்த அழகான, அருமையான விஷயங்களைபார்க்கிறான்.

சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள் போல் இருந்தோம்.அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். (சங்கீதம் 126:1,2) ஒரு கனவு போல் அவனுடைய வாழ்க்கை முழுமையாக மாறுகிறது.கர்த்தர் இவனுக்கு பெரிய காரியங்களை செய்தார் என்று புறஜாதிகள் தங்களுக்குள் சொல்லி கொள்ளுகிறார்கள்.தேவனுடைய கிரியைகள் நம் வாழ்க்கையில் வெளிப்படும்போது,அக்கம் பக்கத்தினர் நம்மை பற்றி பேச ஆரம்பிக்கிறார்கள்.

அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்.சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான் (யோவான் 9: 8,9). நான் பார்க்கும்போதெல்லாம் இவன் ஒன்றும் இல்லாமல் பிச்சை தானே எடுப்பான்.சிலரால் அவனை அடையாளம் கூட காண முடியவில்லை.அந்த அளவுக்கு ஒரே நிமிடத்தில் அவன் வாழ்க்கையை தேவன் தலைகீழாய் மாற்றுகிறார். ஆம், அவருடைய கிரியைகள் அவன் வாழ்க்கையில் வெளிப்பட்டது. அன்றைக்கு கிரியை செய்த அதே ஆண்டவர் இன்றும் கிரியை செய்து வருகிறார்.ஆண்டவரே, என்னுடைய வாழ்க்கையிலும் உம்முடைய கிரியைகள் வெளிப்பட வேண்டும் என்று ஜெபியுங்கள்.கர்த்தர் இதை படிக்கிற ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கிரியை செய்ய விரும்புகிறார்.நம்முடைய கண்களுக்கு மட்டும் இல்லை. நம்மை சுற்றி உள்ள அநேக கண்களுக்கு தெரியும்.. “அவனுடைய அயலாகத்தார் குருடனாய் இருக்கும்போது அவனை பார்த்தவர்கள் தங்களுக்குள்ளேயே பேசி கொண்டார்கள்” இப்படியாக எல்லார் கண்களுக்கு முன்பாக அவருடைய கிரியைகள் நம் வாழ்க்கையில் வெளிப்பட போகிறது.

அதேபோல் உங்கள் அயலகத்தாரும், உறவினர்களும், உங்களுடன் வேலைபார்ப்பவர்களும், நீங்கள் தாழ்மையில் ஒன்றும் இல்லாமல் இருக்கும்போது உங்களை பார்த்தவர்களும் , சந்தோஷப்பட்டாலும் சரி, சந்தோஷப்படாவிட்டாலும் சரி, நிச்சயம் அவருடைய கிரியைகள் அவருடைய நாமம் மகிமைக்காக உங்கள் வாழ்வில் வெளிப்பட செய்ய போகிறார். எனவே, கலங்காதே மகனே/மகளே, இனி நீ ஒருநாளும் பழைய இருட்டான வாழ்க்கைக்கு போக போவதில்லை. கர்த்தர் உன்னை பரவி போகிற ஆற்றை போல் மாற்றப்போகிறார் .

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ..

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.