சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரம்..

வேதத்தில் தேவன் அநேகருக்கு சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை கொடுத்திருக்கிறார். அதே ஆசீர்வாதத்தை இதை வாசிக்கிற உங்களுக்கு தேவன் தர விரும்புகிறார்.

மங்கிப்போன வாழ்க்கையை தேவன் மகிமை நிறைந்த வாழ்க்கையாகமாற்றி போகிறார்.

ஏன் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மங்கிப்போன நிலைமை வருகிறது?

1. ஆசீர்வாத குறைவினால்

2. துக்கத்தினால்

3. பிசாசின் சூழ்ச்சியினால்

ஆசீர்வாத குறைவு நம்முடைய வாழ்க்கையில் வரும்போது நம்முடைய மகிமை மங்கிப் போகிறது. அன்னாளுடைய வாழ்க்கையில் ஆசீர்வாத குறைவினால் அவளுடைய வாழ்க்கை மங்கிப் போயிருந்தது. துக்கத்தினால் நம்மளுடைய மகிமை மங்கிப் போகிறது. மொர்த்தெகாயின் வாழ்க்கை துக்கத்தினால் மங்கிப் போயிருந்தது. பொதுவாக துக்கப்படும் போது நம்முடைய அழகு குறைந்து போகிறது. நாம் நம்மை கவனிக்கும் விதம் குறைந்து போகிறது.நம்மளுடைய பலன் குறுகிப் போகிறது .

அடுத்ததாக பிசாசின் சூழ்ச்சியினால் ஏற்கனவே ஆசீர்வாதங்களால் நிரம்பி இருந்த நாம் இப்போது ஒன்றும் இல்லாமல் இருக்கிறோம். யோசேப்புடைய பழைய வஸ்திரத்தை போல்.,

ஒருவேளை உங்களுடைய பழைய வாழ்க்கையும் அனேக வண்ணங்கள் நிறைந்த ஒரு சந்தோஷமான மனம் நிறைந்ததான வாழ்க்கையாக இருந்திருக்கலாம். ஆனால் பிசாசின் சூழ்ச்சியினால் அந்த வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கை ஒன்றுமில்லாமல் இப்போது மங்கிப்போய் காணப்படலாம் . யோசேப்பின் வண்ணங்கள் நிறைந்த அந்த வஸ்திரம் இப்போது சிறைச்சாலை வஸ்திரமாக , பார்ப்பதற்கு அழகாக இல்லாத வஸ்திரம் ஆக மாறி இருக்கலாம். மற்றவர்களுடைய பொறாமையினால் சில வருடங்களாக உங்களுடைய வாழ்க்கை தலைகீழாக மாறி இருக்கலாம். அல்லது பிறந்ததிலிருந்தே ஒரு மங்கி போன வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம் பிறந்ததிலிருந்தே சந்தோஷம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்லும் அளவுக்கு உங்கள் வாழ்க்கை மங்கிப்போன நிலவரத்தில் இருக்கலாம்.

தேவன் இன்றைக்கு அதை மாற்றி நல்ல நிலைமைக்கு உங்களைக் கொண்டு வர நல்ல வஸ்திரங்களை, மிகப்பெரிய மகிமையை, முகப்பொலிவை, அரண்மனை சிங்காரத்தை கொடுத்து உங்களை அழகு பார்க்க போகிறார். நீங்கள் ஒருவேளை மற்றவர்களால் மதிக்கப்படாதவர்களாக இருக்கலாம். அநேகர் உங்களை ஏளனமாகப் நினைக்கலாம். உங்களுடைய தோற்றம் கூட ஒரு வேளை மற்றவர்களுடைய சிரிப்புக்கு ஏற்றதாக இருக்கலாம். உங்களுடைய வாழ்க்கையில் அநேக வெட்கமான காரியங்கள் கொக்கரித்துக் கொண்டிருக்கலாம். மனுஷனுடைய பார்வையில் ஒரு குப்பையும் தூசியுமாக நீங்கள் தெரியலாம். ஆனால் தேவன் உங்களை கனம் பண்ண விரும்புகிறார். இத்தனை நாட்கள் உங்கள் வாழ்க்கை சாம்பலை போல மிகவும் தாழ்மையானதாக இருந்திருக்கலாம். சரியான உடை கூட இல்லாமல் இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் சமுதாயத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அநேக பெருமையான மனிதர்களுக்கிடையே நீங்கள் கூனிக்குறுகி போய் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அந்த பெருமையான மனுஷனும் உங்களைப் பார்த்து ஏளனமாய் சிரித்து, “உன்னால் வாழ்க்கையில் எந்த ஒரு சாதனையையும் படைக்க முடியாது” என்று கேவலமான பார்வை பார்த்துக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு முன்பாக நீங்கள் கொஞ்சம்கூட நிகரே இல்லை என்று அவர்கள் மனதில் எண்ணிக் கொண்டிருக்கலாம். நீங்களும் அதை நம்பிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நிகராக இன்னும் எத்தனை வருடம் நாம் உழைத்தாலும் அந்த நிலைமைக்கு அந்த உயரத்துக்கு நம்மால் வாழ முடியாது என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையோடு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் தேவன் இன்று உங்களை பார்த்து சொல்கிறார். சடுதியில் மொர்த்தெகாயை உயர்த்தியவர், யோசேப்பை உயர்த்தியவர் ,ஒரே நாளில் அவர்கள் வஸ்திரங்களை மாற்றினவர், மங்கிப்போன அவர்கள் வாழ்க்கையை மகிமையான வாழ்க்கையாக மாற்றினவர், உங்களுடைய வாழ்க்கையையும் சடுதியில் ஒரே நாளில் மாற்ற அவரால் முடியும். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறர்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.,

(I சாமுவேல் 2:8) அன்னாள் தன்னுடைய வாழ்க்கையில் தேவன் ஒரு மகிமையை தந்த பின்பு பாடிய பாடல் இது. அவளுடைய வாழ்க்கையில் தேவனே ஒரு சில காலங்கள்

அவளுடைய ஆசீர்வாதத்தை அடைத்து வைத்திருந்தார் . ஆனால் அவளுடைய சக்களத்தியோ அதை அறியாமல் அவளை மிகவும் காயப்படுத்தினாள். ஒரு நாள் வந்தது . அன்னாளுடைய சாம்பலுக்கு பதிலாக அவளுக்கு சிங்காரம் கிடைத்தது.

நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல்போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு,ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.

(எஸ்தர் 4:1,2)

ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,

ராஜா உடுத்திக்கொள்ளுகிற வஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.

அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.

(எஸ்தர் 6:7-9)

ஒரு மனிதன் சிறைச்சாலையில் இருக்கும் போது அவனுடைய உடை மங்கி போய் இருக்கும். அதேபோல்தான் சிலநேரம் பிசாசானவன் நம்முடைய வாழ்க்கையை சிறையிருப்பில் வைக்கும்போது, சில சூழ்ச்சிகளினால்நம்மை சிறைபிடிக்கும் போது, நம்முடைய மேன்மையும் பழைய மகிமையும் மங்கிப் போனது போல் காணப்படும். அப்படிப்பட்ட நம்முடைய வாழ்க்கையை தேவன் சடுதியில் சிங்காரமாக,மிகவும் அழகாக மாற்ற அவரால் முடியும். இன்றைக்கு நம்முடைய வஸ்திரத்தை தேவன் மகிமையின் வஸ்திரமாக மாற்ற விரும்புகிறார்.

சிறைச்சாலையில் வசிப்பவர்களுக்கென்று ஒரு உடை உண்டு, அரண்மனையில் வசிப்பவர்களுக்கென்று ஒரு உடை உண்டு. சிறைச்சாலைவாசிகளாக இருந்த நம்மை

தேவன் அரண்மனைவாசிகளாக உயர்த்தப் போகிறார். சிறையிருப்பிலிருந்து விடுதலையாக்கி அரண்மனை உடையை தரப்போகிறார். ராஜாதி ராஜாவாகிய தேவன் சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தர போகிறார்.

அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம்பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்.

(ஆதியாகமம் 41:14).

பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை, அவனுக்கு உடுத்தி,

பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,

தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.

(ஆதியாகமம் 41:42,43).

அனேக நேரம் நம்முடைய வாழ்க்கையில் அதிகப்படியான மன அழுத்தத்தின் வழியாக நாம் செல்லும்போது இந்த சாம்பலை போன்ற வாழ்க்கையாக இருக்கிறது. மொர்தெகாய், ஆமானின் சதித்திட்டத்தை கேள்விப்பட்டபோது அவனுக்கு மிகவும் மன அழுத்தம் உண்டானது. அப்பொழுது தன் மேலேயே தானே சாம்பலை கொட்டிக் கொண்டான் தன்னுடைய வேதனையை இவ்வாறாக காண்பித்தான்.,

இறுதியில் தேவன் ஆமானின் வாயாலேயே மொர்தெகாய்க்கு ஒரு சிங்காரத்தை கொடுத்தார். இதேபோல பிசாசு ஒருவேளை உங்களுடைய வாழ்க்கையில் உள்ள மகிமையைப் அழிக்க முயற்சிக்கலாம். ஆனால் தேவன் இன்று அந்த சூழ்ச்சியை உடைத்து உங்களுக்குரிய மகிமையை உங்களுக்கு தருவார்.

அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான். (எஸ்தர் 6:9).

நாம் அதிகமாக அழகாக பார்க்கப்படும் வைரமானது பூமிக்கடியில் சாதாரண கார்பன் கரித்துகள்களாலும், அதிகப்படியான வெப்பத்தாலும் அதிகப்படியான அழுத்ததாலும் ஒரு அழகான வைரமாக மாறுகிறது.

ஒருவேளை நீங்களும் இது போன்றவெப்பம் நிறைந்த அழுத்தம் நிறைந்த பாதையின் வழியாக கடந்து போய்க்கொண்டு இருக்கலாம். இன்று ஒரு அழகான வைரமாக உங்களை மாற்றி சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தரப்போகிறார்!!!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!! ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

1 thought on “சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரம்..

Leave a Reply

Your email address will not be published.