கர்த்தர் நம்மை உருவாக்கும் விதம்..

கர்த்தர் நம்மை உருவாக்கும் விதம்முதலாவது கர்த்தர் நம்மை எப்படி உருவாக்குவார் என்றால், அநேக நேரங்களில் கர்த்தர் நம்மை உருவாக்கி கொண்டுதான் இருக்கிறார் என்பதே நமக்கு தெரியாது.

நாம் கர்த்தாவே, என்னை பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் என்று ஜெபிக்க ஆரம்பிப்போம். அந்த தருணத்தில் கர்த்தர் நம்மை பயன்படுத்த வேண்டும் என்றால், அதாவது ஊழியத்திலோ இல்லாவிட்டால் எந்த ஒரு துறையிலோ சரி, கர்த்தர் நம்மை பயன்படுத்த வேண்டும் என்றால், முதலாவது அவர் நம்மை உருவாக்குதல் அவசியமாய் இருக்கிறது. இந்த இடத்தில் நாங்கள் எங்களுடைய உருவாக்குதல் அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொள்ள போகிறோம். இது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானதாக கூட அமையலாம். ஆனாலும் உருவாக்குதல் என்பது இப்படித்தான் இருக்கும் என்கிற ஒரு ஐடியா உங்களுக்கு கிடைக்கும். இந்த உருவாக்குதல் அனுபவம் எங்கள் வாழ்வில் எப்போது ஆரம்பித்தது? என்றால் ஒரு ஜெப கூட்டத்துக்கு நாங்கள் போயிருந்தோம். அங்கே கர்த்தர் உங்களை எடுத்து பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், என்னை உருவாக்கும் ஆண்டவரே!! என்று நீங்கள் ஜெபியுங்கள் என்று அந்த பாஸ்டர் சொன்னார். அப்பொழுது நாங்களும் தேவனை நோக்கி ஊக்கமாக எங்களை உருவாக்கும் ஆண்டவரே என்று ஜெபிக்க ஆரம்பித்தோம். அதாவது நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் அந்த ஜெப நேரத்திலேயே அந்த இருபது முப்பது நிமிஷத்திலேயே, அந்த ஜெப வேளையிலேயே தேவன் எங்களை உருவாக்கி மறுநாளிலிருந்து தேவன் எங்களை எடுத்து பயன்படுத்த போகிறார் என்று நினைத்தோம். அந்த ஜெபத்தை முடித்துவிட்டு நாங்களும் சந்தோஷமாக வீடு திரும்பினோம். அதன்பின்பு, சில நாள் கழித்து எங்கள் குடும்ப ஜெபத்தில் தேவன் பேசினார். அப்பொழுது கர்த்தர் எங்களிடம் என்ன பேசினார் என்றால், இப்பொழுது நீங்கள் ஒரு குயவன் கையில் இருக்கிற மண் பானை போல் என் கையில் இருக்கிறீர்கள். இதில் எனக்கு பிடிக்காத நிறைய விஷயங்கள்

இருக்கிறது. அதனால் நான் இப்போது என்ன பண்ண போகிறேன் என்றால், இந்த பானையை உடைத்து திரும்ப எனக்கு பிடித்த மாதிரி வேறு ஒரு பானையாக நான் வனைய போகிறேன் என்றார். (எரேமியா 18: 4 குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்.)கர்த்தர் சொன்ன வார்த்தை ஆரம்பத்தில் எங்களுக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால், கர்த்தர் எங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்று வித்தியாசமாக செய்யப்போகிறார் என்பதை மட்டும் அறிந்து கொண்டோம். இந்த வார்த்தை எங்களுக்கு கிடைத்த பின்பு சில நாட்கள் கழித்து எங்களுடைய வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. ஆனால், எங்களுக்கு நாங்கள் இந்த உருவாக்குதல் பாதையின் வழியாக தான் கடந்து வந்து கொண்டிருக்கிறோம், அதனால் தான் எங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தது என்பதே எங்களுக்கு தெரியாமல் இருந்தது. எங்கள் வாழ்க்கையில் என்ன தான் நடக்கிறது என்று தெரியாமல் நாங்கள் கலங்கி திரும்பவும் ஜெபித்த போது, கர்த்தர் எங்களிடம்: நீங்கள் “எங்களை உருவாக்கும் ஆண்டவரே என்று ஜெபித்த ஜெபத்திற்காக இப்போது நான் உங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் “என்று பதிலளித்தார். அப்போதுதான் எங்களுக்கு தெளிவாக புரிந்தது. முதலாவது உருவாக்குதலின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நாம் இப்போது பார்க்கலாம் .இந்த உருவாக்குதல் Process உங்கள் வாழ்க்கையில் ஆரம்பிக்கும்போது, நீங்கள் தனிநபராக இதற்குள்ளே போகலாம் இல்லாவிட்டால் ஒரு குடும்பமாக நீங்கள் இதற்குள்ளே போகலாம். உள்ளே போனதும் கர்த்தர் நம்மை தனிமைப்படுத்த ஆரம்பிப்பார். ஏன் கர்த்தர் முதலாவது நம்மை தனிமைப்படுத்த ஆரம்பிக்கிறார் என்றால், நமக்கும் கர்த்தருக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்துவதற்காக!.. நம் இருவருக்கும் இடையே எந்த ஒரு உறவும் வரக்கூடாது என்பதற்காக நம்மை தனிமைப்படுத்த ஆரம்பிப்பார். உதாரணத்துக்கு நாம் யோசேப்புடைய வாழ்க்கையையும், தாவீதுடைய வாழ்க்கையையும் எடுத்துக்கொள்ளலாம். இவர்கள் இருவருக்குமே பிற்காலத்தில் இவர்கள் பெரிய ஆளாக போகிறார்கள் என்ற தரிசனம் கொடுக்கப்பட்டது.

யோசேப்பு பெரிய ஆளாக ஆக போகிறார் என்றும் தாவீது பெரிய ராஜாவாக மாறப்போகிறார் என்கிற தரிசனம் கொடுக்கப்பட்டது. ஆனாலும், அதை நிறைவேற்றுவதற்கு முன்பாக கர்த்தர் இவர்கள் இருவரையும் குடும்பத்தை விட்டு தனியாக பிரித்து தனிமைப்படுத்தினார். அப்போதுதான் கர்த்தருக்கும் இவர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் மேம்பட ஆரம்பித்தது. யோசேப்பு அந்த தரிசனத்தை அவர் சகோதரருக்கு தெரிவித்த உடனே எகிப்துக்கு கொண்டு போகப்பட்டார். அதைப்போல தாவீது கோலியாத்தை கொன்ற உடனே பெரிய ஜெயம் கிடைத்தாலும் அடுத்து குகைகள் மலைகள் காடுகள் போன்ற இடங்களுக்கு கொண்டு போகப்பட்டார். இந்த இரண்டு இடத்திலும் இவர்களுக்கென்று இருந்தவர் ஆண்டவர் மட்டுமே. ஏன் இதுபோல தேவன் நம்மை தனிமை படுத்துகிறார்? என்றால் தேவனைப் பற்றி நாம் இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளவும், அவருடைய குணாதிசயங்களை அறிந்து கொள்ளவும், அவரைப்போல மாறவும், அவரோடு நெருங்கிப் பழகவும் கர்த்தர் நம்மை தனிமை படுத்துகிறார்.

இரண்டாவதாக பார்த்தால், கர்த்தர் நம்மை உருவாக்குதல் பாதையில் நடத்தும் போது என்ன நடக்கும் என்றால், நாம் பிறருக்காக ஜெபிக்கும்போது அவர்களுக்கு அந்த காரியம் கிடைக்கும். அவர்களுக்கு அந்த ஆசீர்வாதம் வந்து சேரும். ஆனால், நாம் நமக்காக ஏதோ ஒரு பிரச்சனைக்காக ஜெபிக்கும்போது, கர்த்தர் நம்மோடு இல்லாதது போலவும் நம்முடைய அந்த ஜெபம் கேட்கப்படாதது போலவும், ஒரு மந்தமான நிலையாக, ஒரு தேக்கமான நிலையாக நம்முடைய வாழ்க்கை இருக்கும். நமக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். நிறைய பேர் நம்மிடமே வந்து சொல்வார்கள் .நீ ஜெபித்து மற்றவர்களுக்கெல்லாம் ஆசீர்வாதம் கிடைக்கிறது. ஆனால், உன் வாழ்க்கையில் மட்டும் ஏன் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது? என்று இதுபோல உங்களிடம் அநேகர் வந்து சொல்லலாம். கர்த்தர் என்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று அவர்களுக்கு நாம் சொன்னாலும் சில நேரங்களில் அவர்களுக்கு புரியாது. ஆனால் நாம் ஒன்றை மட்டும் நினைத்துக் கொள்ள வேண்டும். கர்த்தர் இந்த உருவாக்குதல் பாதை வழியாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்று. பொதுவாக உருவாக்குதல் அனுபவம் என்பது என்னவென்றால் ஒரு பெரிய ஆசீர்வாதம் வருவதற்கு முன்பாக அல்லது ஒரு பெரிய விதத்தில் தேவன் நம்மை பயன்படுத்துவதற்கு முன்பாக கர்த்தர் இந்த

உருவாக்குதல் பாதை வழியாக நம்மை நடத்துவார். உதாரணத்துக்கு நாம் Indian Army ஐ எடுத்துக்கொள்ளலாம். நேரடியாக நாம் அங்கு போய் சேர முடியாது. அவர்கள் நிறைய Criteria, qualifications வைத்திருப்பார்கள். அநேக பரீட்சை வைத்துதான் உள்ளே வேலைக்கு போக முடியும். பொதுவாக அங்கு Training period சாதாரணமாக இருக்காது. அதுவும் Indian Army போல Training எல்லாம் சாதாரணமாக இருக்காது. மிகவும் கடினமாக இருக்கும். ஏன் அந்த Training கடினமாக இருக்கும் என்றால், நமக்கு பிடித்த எதையுமே அந்த இடத்தில் செய்ய முடியாது. நமக்கென்று ஒரு coach அல்லது Guide நம்மை கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். நாமாக சுயமாக எதுவுமே முடிவெடுத்து செய்ய முடியாது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே நாம் செய்ய முடியும். சீக்கிரமாக எழும்ப வேண்டும் என்று சொல்வார்கள், நமக்கு பிடித்த சாப்பாடு சில நேரங்கள் அங்கு சாப்பிட முடியாது, நிறைய உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அதே போல் தான் நாமும் உருவாக்கும் காலம் காலத்தில் இருக்கும்போது நமக்கு பிடித்த எதையுமே நாம் செய்ய முடியாது. ஏனென்றால் கர்த்தருடைய Control கீழே நாம் எப்போதும் இருப்பது போல உணர்வோம். உதாரணத்துக்கு யோசேப்புடைய வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், அவன் தன் தகப்பன் வீட்டில் இருக்கும்போது மிகவும் சுதந்திரமாக ஒரு செல்லப் பிள்ளையாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால், அவன் ஒரு அடிமையாக போகும்போது அந்த உருவாக்குதல் அனுபவத்திற்குள் போகும்போது, அங்கே அடிமைக்களுக்கு மேலே அநேகரை Incharge ஆக வைத்து இருப்பார்கள். அவர்கள் என்ன சொல்லுகிறார்களோ அதை மட்டுமே நாம் அந்த நேரத்தில் செய்ய முடியும். அதைப் போல் தான் இந்த உருவாக்குதல் அனுபவம் நம்முடைய வாழ்க்கையில் வரும்போது யாரோ ஒருவர் நம்மை எப்பொழுதுமே Control செய்து கொண்டிருப்பது போல, நம்மால் எதுவுமே சுயமாக செய்ய முடியாதது போல இருக்கும்.அடுத்ததாக இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்றால், இப்போது சொல்வதை அப்படியே கற்பனை செய்துகொண்டு பாருங்கள். ஒரு

அடர்ந்த காட்டில் இரவு நேரத்தில் நம்மை கொண்டு போய் விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இரவு நேரம் என்பதால் அங்கு ஒரு பாதையும் நமக்கு தெரியாது. எந்த பக்கம் போக வேண்டும் என்று எதுவுமே நமக்கு தெரியாது. பறவைகள் சத்தம், மிருகங்கள் சத்தம் இது மட்டுமே நம்முடைய காதுகளில் கேட்கும். ஒரு பயம், ஒரு திகில் நம்மை சூழ்ந்து கொள்ளும். சில நேரம் அந்த நேரத்தில் இந்த காட்டை கடந்து விட்டால் உனக்கு ஒரு பெரிய ஆசீர்வாதத்தை நான் வைத்திருக்கிறேன் என்று கர்த்தர் நம்முடைய அருகில் நின்று பேசுவது போல நாம் உணர்வோம்.
இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்றால் எல்லா நேரமும் கர்த்தர் நம்முடைய பக்கத்தில் இருப்பார் என்றும் சொல்ல முடியாது, அதே சமயம் கர்த்தர் நம் கூட இல்லை என்றும் சொல்ல முடியாது. அவ்வபோது அந்த காட்டில் வந்து நமக்கு கர்த்தர் நம்பிக்கை கொடுப்பது போல இருக்கும். இதேபோல் ஒருவேளை உங்களுடைய வாழ்க்கை இருந்தால் இந்த காட்டை மட்டும் நாம் கடந்துவிட்டால் கர்த்தர் பெரிய ஆசீர்வாதம் வைத்திருக்கிறார் என்ற நம்பிக்கையோடு நாம் ஓட வேண்டும். இந்த காட்டை கடப்பதற்கான ஒரு பெரிய பலத்தையும் தேவன் நமக்கு கட்டளையிடுவார்.முன்னமே நான் சொன்னது போல இந்த உருவாக்குதல் அனுபவம் ஒரு Training period போல் இருக்கும். அதாவது நமக்கு பிடிக்காத நிறைய பாதைகளில் தேவன் நம்மை நடத்துவது போல இருக்கும். பேதுருவிடம் கூட கர்த்தர் சொல்வார், இவ்வளவு நாள் உனக்கு இஷ்டமான வழியில் நடந்தாய், இனி வேறு ஒருவன் வந்து உன் அறையை கட்டுவான் என்று. அதன் முன்பு வரை சில நேரங்கள் நாம் என்ன செய்வோம் என்றால் , கர்த்தாவே,உங்கள் வழியில் என்னை நடத்துங்கள், உங்கள் சித்தம் மட்டுமே நிறைவேறட்டும் என்று வெறும் வாயளவில் சொல்லிவிட்டு, பின்பு நமக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்ய ஆரம்பித்துவிடுவோம். ஆனால், இந்த உருவாக்குதல் அனுபவத்தில் நாம் அப்படி செய்யவே முடியாது. உதாரணத்துக்கு தேவனுக்கு பிடிக்காத ஏதோ ஒரு எண்ணங்கள், செயல்கள், பாவங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருந்தால் இந்த உருவாக்குதல் அனுபவத்தில் கர்த்தர் அதை எல்லாம் நம்மை விட்டு எடுத்துவிட்டு அவருக்கு பிடித்தது போன்ற எண்ணங்களை நம்முடைய உள்ளத்தில் வைக்க ஆரம்பிப்பார். சில நேரங்களில் நம்முடைய பார்வைக்கு நாம் எடுத்த முடிவு சரி போலவே தோன்றும். ஆனால்,கர்த்தர் ஏன் இதை தடுக்கிறார் என்று நாம் நினைத்து வருத்தபடுவோம். ஆனால்,பிற்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று கர்த்தருக்கு மட்டுமே தெரியும். அதனால் தான் கர்த்தர் நம்மை இதுபோன்ற பாதையில் நடத்தி நமக்கு பிடித்த சில வழிகளை நம்மை விட்டு விலக்கி நம்மை உருவாக்குகிறார். ஏனென்றால், பிற்காலத்தில் நாம் எடுத்த முடிவு தீமையை கொண்டு வரும் என்று அவருக்கு தெரியும். இந்த உருவாக்குதலின் அனுபவம் முடிந்த பின்பு நம்முடைய ஜெப வாழ்க்கை முழுவதுமாக மாறிவிடும். நம்முடைய சொந்த வாயாலேயே, கர்த்தாவே!என்னுடைய சித்தம் என்று எதுவுமே இல்லை, உமக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி என் வாழ்க்கையை நடத்தும் என்று முழுவதுமாக அர்ப்பணித்து ஜெபிக்க ஆரம்பித்துவிடுவோம். அந்த அளவு இந்த அனுபவம் நம்மை மாற்றி விடும்.
அடுத்ததாக இந்த உருவாக்குதலின் அனுபவத்தில் கர்த்தர் என்ன செய்வார் என்றால், நம்முடைய பெருமையை முற்றிலுமாக உடைக்க ஆரம்பிப்பார். இதற்கு முன்பாக ஒருவேளை நாம் நம்முடைய குடும்பத்தைக் குறித்தோ, குடும்ப வரலாற்றை குறித்தோ, அழகை குறித்தோ, நம்முடைய படிப்பை குறித்தோ, நம்முடைய தொழில் திறனை குறித்தோ, நாம் போகிற சபையைக் குறித்தோ, எதை குறித்து வேண்டுமானாலும் நாம் பெருமைப்பட்டுக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால், அந்த அனுபவம் வழியாக வரும்போது அந்த பெருமைகள் எல்லாவற்றையும் கர்த்தர் உடைக்க ஆரம்பிப்பார். ஏன் கர்த்தர் இந்த பெருமையை உடைக்கிறார் என்றால், நாம் இந்த உருவாக்குதல் அனுபவம் முடிந்த பின்பு ஒரு பெரிய உயரத்துக்கு கர்த்தர் நம்மை கொண்டு போவார். ஆனால், உயரம் ஏற ஏற தானாகவே நமக்குள் பெருமையும் ஏறிவிடும். அதனால் இந்த உருவாக்குதல் அனுபவத்தில் இருக்கும்போதே முதலாவது பெருமையை நம்மை விட்டு முழுவதுமாக அகற்றிவிட்டு தான், நம்மை அந்த உயரத்துக்கு கொண்டு போவார். இந்த அனுபவத்துக்கு வருவதற்கு முன்பாக நம்முடைய சொந்த வாயாலேயே, எனக்கு இவ்வளவு திறமைகள் இருக்கிறது, எனக்கு அது இருக்கிறது , எனக்கு இது இருக்கிறது என்று சொல்லி கொண்டிருக்கலாம். ஆனால், உருவாக்குதல் அனுபவம் முடிந்த பின்பு “என்னை குறித்து பெருமை பாராட்ட ஒன்றுமே இல்லை. இயேசு என்கிற ஒருவரை தவிர நான் பெருமையாக பேச ஒன்றுமே இல்லை” என்று நம்முடைய வாயாலே நாம் சொல்ல ஆரம்பிப்போம். உதாரணத்துக்கு யோசேப்பு தன் சகோதரர்களை விட மிகவும் பாசத்துடன் வளர்க்கப்பட்டான். யாக்கோபு

யோசேப்புக்கு மட்டும் பலவர்ண ஆடைகள் கொடுத்திருந்தார். அதினால் அவனுக்குள்ளே அதிகமான பெருமைகள் கூட இருந்திருக்கலாம். மற்ற சகோதரர்களை விட நம்முடைய தகப்பன் நம்மிடத்தில் பாசமாக நடந்து கொள்கிறாரே என்று. ஆனால், அவன் அடிமை வாழ்க்கைக்கு போன பின்பு அந்த இடத்தில் அவன் பெருமைப்பட போல ஒன்றுமே இல்லை. அந்த இடத்தில் அவனுடைய பெருமை எல்லாவற்றையும் சுக்குநூறாக உடைத்து விட்டார் கர்த்தர். அதன் பின்பு அவன் அதிபதியான பின்பும் அந்தப் பெருமை அவனுடைய வாழ்க்கையில் வரவே இல்லை. அவன் பெரிய ஆளாக ஆன பின்பு அவன் சகோதரர் கூட இப்பொழுது யோசேப்பு பெரிய பதவில் இருக்கிறான், நம்மை கொன்று விடுவானோ என்று பயந்தார்கள். ஆனால்,யோசேப்பு (ஆதியாகமம் 50:20) நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், கர்த்தரோ அதை நன்மையாக மாற்றினார். என்று கர்த்தரை மட்டுமே பெருமையாக பேசினாரே தவிர, அவனுடைய

வாழ்க்கை குறித்து பெருமையாக பேசவில்லை. அதேபோல்தான் கர்த்தர் பிற்காலத்தில் நமக்கு ஒரு பெரிய ஆசீர்வாதத்தையோ, பெரிய பதவியையோ தந்து ஆசீர்வதிக்கும் போது நமக்கு பெருமை வந்து விடக்கூடாது என்பதற்காக உருவாக்குதல் அனுபவத்தில் நாம் இருக்கும்போதே நம்முடைய பெருமை எல்லாவற்றையும் உடைக்க ஆரம்பிக்கிறார்.
அடுத்ததாக பார்த்தோம் என்றால், நம் எல்லாருக்குமே பொதுவாக கர்த்தர் நமக்கு ஒரு தரிசனம் கொடுத்திருப்பார். உதாரணத்துக்கு பார்த்தால் யோசேப்புக்கும் தாவீதுக்கும் கர்த்தர் ஒரு தரிசனம் கொடுத்து இருந்தார். ஆனால், நம்மை சுற்றியுள்ளவர்கள் யாருமே அந்த தரிசனத்தின்படி நம்மைப் பார்க்க மாட்டார்கள். சாதாரணமாக தான் பார்ப்பார்கள். சில நேரங்களில் மிகவும் மோசமாக கூட நம்மை பார்ப்பார்கள். நாம் மட்டுமே அந்த தரிசனத்தின் படி நம்மை பார்க்க ஆரம்பிப்போம். அநேக நேரங்களில் பிறர் நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். நம்மை யாருமே Value பண்ணாதது போல் இருக்கும். ஒரு சில நேரம் நமக்கு உதவி செய்யக்கூடிய இடத்தில் உள்ள மனிதர்கள் நம்மை மறந்தும்கூட போய்விடுவார்கள். உதாரணத்துக்கு யோசேப்பை அந்த பானபாத்திரக்காரன் மறந்து போய்விட்டான். யோசேப்பு அவரிடம் நீங்கள் என்னை மறந்து விடக்கூடாது என்று சொல்லுவார். அந்த

நேரத்தில் யோசேப்பை மறப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனாலும், யோசேப்பை அந்த பானபாத்திரக்காரன் இரண்டு வருடமாக மறந்து போய் விட்டான். நாம் அதை உன்னிப்பாக படித்தால் நமக்கு தெரியும். அந்த இரண்டு வருடத்தில் ஒரு நேரம் கூடவா யோசேப்பை குறித்து அவருக்கு ஞாபகம் வரவில்லை. அவர் தனியாக பழைய காலத்தை நினைத்துப் பார்க்கும்போது, அல்லது அவர்கள் குடும்பமாக சேர்ந்து ஏதாவது பேசும்போது யோசேப்பை குறித்து ஒரு சின்ன நினைவு கூட வரவில்லையா என்று நமக்கு தோன்றும். ஆனால், உண்மை என்னவென்று பார்த்தோமானால் அந்த ஏற்ற காலம் வரும் வரை, அந்த இரண்டு வருட காலமாக அவனுடைய கண்களை கர்த்தரே மறைத்து விட்டார் . அதைப்போல நம்முடைய வாழ்க்கையிலும் சில மனிதர்கள் நமக்கு உதவி செய்தால், நாம் அடுத்த நிலைக்குப் போய் விடுவோம் என்று நாம் நினைப்போம். ஆனால், அவர்கள் நமக்கு உதவி செய்யாமல், நாம் உதவி செய்தவர்கள் கூட திரும்ப நமக்கு உதவி செய்யாமல் மறந்து விட்டது போல, நம்முடைய ஞாபகம் கூட அவர்களுக்கு இல்லாதது போல இருக்கும். ஏனென்றால், கர்த்தரே நாம் இந்த உருவாக்குதல் அனுபவத்தில் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை நம்மை அவர்கள் நினைக்காதபடி அவர்கள் ஞாபகத்தை எடுத்துப் போடுவார் (சங்கீதம் 105:19). கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. ஒரு சரியான நேரம் வரும்போது தான் பானபாத்திரக்காரனுக்கு யோசேப்பை பற்றிய தானக ஞாபகம் வரும்.

அப்போதுதான் கர்த்தர் அவனுடைய ஞாபகத்தை அவனுக்கு திரும்ப கொடுக்கிறார். இது போல் தான் நம்முடைய வாழ்க்கையிலும் நடக்கும். ஒருவேளை நீங்கள் கூட இது போன்று சொல்லலாம். மற்றவர்கள் என்னை மறந்து விட்டார்கள், அவர்கள் மட்டும் உதவி செய்திருந்தால் இந்நேரம் நான் பெரிய நிலைமைக்கு வந்திருக்கலாம் என்று. ஆனால், அந்த ஏற்ற காலம் வந்தால் மட்டும்தான் கர்த்தர் நம்மை உயரத்துக்கு கொண்டு போகமுடியும். யார் நம்மை மறந்தாலும் தேவன் நமக்கு தந்த நம்முடைய தரிசனமோ, நம்மை குறித்ததான திட்டங்களோ எதுவுமே தடைபட்டு போகாது. ஏற்ற காலம் நம்முடைய வாழ்க்கையில் வரும்போது தான் மக்கள் வந்து நம்மை ஒரு அதிபதியாக, ஒரு ராஜாவாக, அந்த தரிசனத்தின்படி நாம் நம்மை எப்படிப் பார்க்கிறோமோ அதேபோல் மக்களும் நம்மை பார்க்க ஆரம்பிப்பார்கள். அதற்கு முன்பு வரை யோசேப்பை எல்லோருமே அடிமையாக தான் பார்த்தார்கள். யாருமே அதிபதியாக பார்க்கவில்லை.

ஆனால், அதன் பின்பு அந்த தேசம் முழுவதுமே யோசேப்பை அதிபதியாக பார்க்க ஆரம்பித்தார்கள். இதேபோல்தான் உருவாக்குதல் அனுபவத்தில் நாம் போகும் போது நம்மை யார் என்று மற்றவர்கள் அறியக்கூடாதபடிக்கு கர்த்தரே நம்மை சுற்றியுள்ள எல்லாருடைய கண்களையும் அடைத்து போட்டிருப்பார்.
கடைசியாக உருவாக்குதல் அனுபவம் எப்படி இருக்குமென்றால், உதாரணத்துக்கு ஒரு குயவன் கையில் ஒரு மண்பாண்டம் இருக்கிறது. அதைப் பார்க்கும்போது அவருக்கு அந்த மண்பாண்டம் பிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதை வனைந்ததில் அவருக்கு முழு திருப்தி இல்லை. எனவே அவர் வந்து அதை வேறு ஒரு மண்பாண்டம்

ஆக திரும்பவும் வனைந்து, அதை அழகுபடுத்தி மிகவும் அழகான ஒரு மண்பாண்டம் ஆக மாற்றுகிறார். இதேபோல்தான், கர்த்தர் நம்முடைய வாழ்க்கையிலும் அவருக்கு பிடிக்காததை எல்லாம் எடுத்துவிட்டு, அவருக்கு பிடித்தது போல நம்முடைய வாழ்க்கையை மாற்றி, அதன் பின்பு நமக்கு ஒரு பதவி உயர்வு அல்லது ஒரு பெரிய ஆசீர்வாதத்தை கொடுத்து நம்மை அழகுப்படுத்தி பார்க்கிறார். நமக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுத்து அழகுபடுத்தி பார்க்கிறார். சாதாரணமாக ஒரு பாத்திரம் இருந்தால் ஒரு நல்ல Painting பண்ணாமல், சரியான ஒரு Decoration இல்லாமல் இருந்தால் யாருமே அதை பார்க்க மாட்டார்கள், அதை விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். அதைப்போல் தான் கர்த்தர் நம்மை உருவாக்கு முன் எந்த மனிதர்களும் நம்மை விரும்ப மாட்டார்கள், பார்க்க மாட்டார்கள், மதிக்க மாட்டார்கள். ஆனால், இந்த உருவாக்குதல் அனுபவம் முடிந்து, கர்த்தர் நம்மை அழகுப்படுத்தி முடித்த பின்புதான் இந்த உலகத்தில் உள்ள அனைவருமே நம்மை பார்க்க ஆரம்பிப்பார்கள். எல்லாருடைய கண்களும் நம் பக்கம் திரும்ப ஆரம்பிக்கும். இந்த உருவாக்குதல் அனுபவம் கடினமான Process தான். ஆனால், இது முடியும் வரை நாம் கர்த்தருடைய கரத்தில் அடங்கி இருந்தால் பிற்காலத்தில் ஒரு பெரிய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம்.

(1 பேதுரு 5:6) ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.