கர்த்தரை பிரியப்படுத்தும் ஏழு வழிகள் .உதாரணத்திற்கு பார்த்தோமானால், நாம் ஒரு வேலையில் இருந்தால் அந்த மேனேஜரை பிரியப்படுத்துவதற்கு சில காரியங்கள் செய்வோம். அதேபோல் ஸ்கூலில் படித்தால் ஆசிரியர்களை பிரியப்படுத்த சில காரியங்களைச் செய்வோம். அதேபோல ஆண்டவரை பிரியப்படுத்த நிறைய வழிகள் உண்டு. இன்றைக்கு நாம் ஒரு ஏழு வழிகளை பார்ப்போம்.
- முதலாவதாக நாம் கர்த்தரை எப்படி பிரியப்படுத்தலாம் என்றால் நாம் எதை செய்தாலும் அதை கர்த்தரிடம் கேட்டு கேட்டு செய்ய வேண்டும். இந்த மாதிரி நாம் எதை செய்தாலும் அவரிடம் கேட்டு கேட்டு செய்தால் கர்த்தர் நம் மேல் பிரியமாக இருப்பார். உதாரணத்திற்கு தாவீது ராஜா ஒரு பெரிய ராஜாவாக இருந்தாலும் , அவர் எதை செய்தாலும் கர்த்தரிடம் கேட்டு கேட்டே செய்வார்.

நம்முடைய வாழ்க்கையிலும் நம்மை சுற்றியுள்ள நண்பர்கள், பழகியவர்கள், நம் வீட்டில் உள்ளவர்கள், பெற்றோர்கள் இவர்களுக்கு நாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை தெரியப்படுத்துவோம். அதேபோல ஆண்டவரிடமும் நாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற விஷயத்தை ஒப்புக் கொடுத்து அவரிடம் ஆலோசனை கேட்டு அதன் பின்பு செய்ய வேண்டும். இதேபோல் நாம் செய்தால் ஆண்டவருடைய இருதயம் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கும். தாவீதைக் குறித்து இவன் என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று சொல்லுவதற்கு இதுவே காரணம் (அப்போஸ்தலர் 13:22).
- இரண்டாவதாக நாம் பார்த்தோமானால், ஆண்டவர் மேலே நாம் முழுமையாக விசுவாசம் வைக்க வேண்டும். அப்படி நாம் விசுவாசம் வைக்கும்போது ஆண்டவர் நம் மேல் அதிகமாக பிரியப்படுவார். அநேக நேரங்களில் அடுத்த 10 ஆண்டுகளில் நம்முடைய வாழ்க்கையில் என்ன சம்பவிக்கும் என்பதை தேவன் முன்னமே நமக்கு முழுமையாக தெரியப்படுத்தமாட்டார். அப்படி தெரியப்படுத்தாமல் இருந்தாலும் நாம் அவர் மேல் விசுவாசத்தோடு அந்த நாட்களை கடத்துகிறோமோ என்பதை பார்ப்பார். ஆனால், மனிதர்களாகிய நாம் என்ன எதிர்பார்ப்போம் என்றால் இப்பொழுதே அடுத்த 10 ஆண்டுகளுடைய தேவனுடைய திட்டத்தை நம்முடைய வாழ்க்கையில் தேவன் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுவோம். உதாரணத்துக்கு Puzzle game விளையாடும் போது

நமக்கு முழு வரைபடம் எதுவுமே தெரியாது. ஆனால், ஒவ்வொரு Card ஆக எடுத்து வைத்து கடைசியில் முடிக்கும்போது தான் அதில் என்ன உள்ளது என்பதற்கான அறிவு நமக்கு வரும். அதே போல் தான் ஆரம்பத்தில் கர்த்தர் என்ன செய்கிறார் என்பதே தெரியாது. விசுவாசத்தோடு ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போது முடிவில் தான் கர்த்தருடைய திட்டம் நமக்கு தெரிய வரும். உதாரணத்துக்கு கர்த்தர் ஆபிரகாமை அழைத்து, நீ புறப்பட்டு போ என்று சொல்வாரே தவிர, எங்கே போகவேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியதான

முழுவரைபடத்தை சொல்ல மாட்டார். ஆனால், நாம் அதை விசுவாசத்துடன் செய்கிறோமா, அடி எடுத்து வைக்கிறோமா என்பதை தேவன் காண்கிறார்.
- மூன்றாவதாக நாம் கர்த்தருடைய காரியத்துக்கும் கர்த்தருக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் நான் கர்த்தரை மகிழ்விக்கலாம். (மத்தேயு 6 :33) ல் பார்கிறோம். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் என்று. உதாரணத்துக்கு பார்த்தோமானால், ஒரு தற்காலிக உலகத்தில் வாழ்கின்ற இந்த உலகத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து நாம் ஓடும் போது

கண்டிப்பாக நிரந்தரமாக நாம் போய் வாழக்கூடிய பரலோகத்துக்கு கண்டிப்பாக முதலிடம் கொடுக்க வேண்டும். ஆண்டவருடைய காரியத்துக்கானாலும் சரி, ஆண்டவருக்கானாலும் சரி, அது போன்ற காரியங்களில் நாம் மிகவும் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும். இது மாதிரி நாம் தேவனுக்கு முதலிடம் கொடுத்தால், கர்த்தருடைய இருதயம் நம்மேல் அதிகமாக மகிழ்ச்சியாய் இருக்கும்.
- நான்காவதாக, நாம் கர்த்தரை மகிழ்விக்க ஒரு காரியம் என்னவென்றால், மனந்திரும்புதல். நாம் ஒரு சில பாவங்களை விட்டு நாம் மனந்திரும்பி கர்த்தரிடம் திரும்பும்போது கர்த்தர் நம் மேல் பிரியமாக இருப்பார். (எசேக்கியல் 18:23). ஒரு சில நேரம் நமக்கே நாம் செய்கிறது தவறு என்று தெரியும், இருந்தாலும் நாம் அதை அப்புறம் விட்டுவிடலாம், இன்னும் கொஞ்சக்காலம் கழித்து விட்டுவிடலாம் என்று காலதாமதம் பண்ணிக் கொண்டே இருப்போம். உதாரணத்துக்கு பார்த்தோமானால், பொய் பேசுவது, கோபப்படுவது, அதிகமாக போன் நோண்டுவது, சினிமா பாடல்கள் கேட்பது, மது அருந்துவது, கெடுதல் நினைப்பது, புறம் பேசுவது, தன் குற்றங்களை பார்க்காமல் மற்றவர்கள் குறைகளை மட்டுமே பார்ப்பது, இது போன்ற அனேக காரியங்களை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பாவத்தை விட்டால் தான் நம்முடைய வாழ்க்கையில் ஆசீர்வாதம் வரும் என்று நமக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், இதை விடுவதற்கு நாம் காலதாமதம் பண்ணி கொண்டிருப்போம். கர்த்தர் நம்மை உணர்த்திக் கொண்டே இருப்பார். நாம் எப்பொழுது அதை விட்டு வெளியே வருவோமோ அப்போதுதான் தேவன் நம்மேல் பிரியமாயிருக்க முடியும். உதாரணத்துக்கு கெட்ட குமாரனை பார்க்கலாம். அவர் எப்போது வெளியே வந்தாரோ, தகப்பனை தேடி வந்தாரோ

அப்போது தான் தகப்பனுடைய இருதயம் அவர்மேல் மகிழ்ந்தது. அதிகமாய் பிரியப்பட்டது. அதே போல் நாமும் நம்முடைய பாவத்தை விட்டு விலகி கர்த்தரிடம் திரும்பும்போது நம்முடைய கர்த்தருடைய இருதயத்தை அதிகமாய் மகிழ்ச்சியாக்கலாம்.
- ஐந்தாவதாக பார்த்தோமானால், நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் போது அவருடைய இருதயம் நம்மேல் பிரியமாய்

இருக்கும். ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் ஒரு சிறிய அற்புதம் செய்தாலும் சரி, பெரிய அற்புதம் செய்தாலும் சரி, அதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று கர்த்தர் நம்மிடத்தில் விரும்புவார். உதாரணத்துக்கு கர்த்தர் பத்து குஷ்டரோகிகள் சுகமாக்குவார். ஆனால், கடைசியில் ஒரே ஒரு குஷ்டரோகி மட்டுமே வந்து கர்த்தருக்கு நன்றி செலுத்துவார். அப்பொழுது கர்த்தர் மற்றவர்கள் எங்கே என்று கேட்பார். அதற்காக தேவன் அவர்களுக்கு மீண்டும் அந்த குஷ்டரோகத்தை தந்து அவர்களை

தண்டிக்கவில்லை. ஆனால், நன்றியுள்ள ஒரு இருதயத்தை தேவன் அவர்களிடம் எதிர்பார்த்தார். எனவே, நாமும் அவர் செய்த சிறிதும் பெரிதுமான எல்லா காரியத்துக்கும் நன்றியுள்ள இருதயம் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் கர்த்தரை மகிழ்விக்கலாம்.
உதாரணமாக, நாம் மனிதர்களிடம் கூட ஒரு சிறிய உதவி பெறும்போது Thanks சொல்றோம். அதேபோல் நாம் கர்த்தரிடமும் கண்டிப்பாக நன்றி செலுத்த பழக வேண்டும்.
- ஆறாவதாக பார்த்தோமானால், உற்சாகமாய் கொடுத்தல். நாம் ஆண்டவருக்காக எதைக் கொடுத்தாலும் உற்சாகமாய் கொடுக்கவேண்டும். (2 கொரிந்தியர் 9:7) இல் இருக்கிறது. உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். அதாவது, நேரமாக இருக்கலாம், பணமாக இருக்கலாம், அல்லது நாம் ஆண்டவருக்காக செய்கிற ஏதோ ஒரு வேலையாக இருக்கலாம், எதை நாம் கொடுத்தாலும் உற்சாகமாய் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு பார்த்தோமானால்,

எல்லாரும் தசமபாகம் காணிக்கை செலுத்துவோம். தசமபாகம் என்றால் நமக்கு வரும் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு நாம் ஆண்டவருக்கு கொடுப்பது. அப்படி நாம் ஒவ்வொரு மாதமும் கொடுக்கும் போது நமக்கே இவ்வளவு தேவைகள் இருக்கிறது, நாம் எப்படி அவருக்கு கொடுக்க முடியும் என்ற நினைப்போடு நாம் கொடுக்காமல் உற்சாகமாய் நாம் அவருக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் போது நம் இருதயத்தின் ஆழத்தில் கூட ஒருவித முறுமுறுப்போடு கொடுக்கக்கூடாது. உதாரணத்துக்காக காயீன் ஆபேலை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் செலுத்திய பலியை வைத்து கர்த்தர் ஒன்றும் செய்யப்போவதில்லை. ஆனாலும் அவர்கள் எப்படி கொடுக்கிறார்கள், அவர்கள் இருதயம் எப்படியிருக்கிறது என்பதை கர்த்தர் பார்க்கிறார். நாம் கர்த்தருக்காக சபையில் ஒரு பாடல் பாடலாம் அல்லது அவருக்காக சபையில் ஏதோ ஒரு வேலை செய்கிறதாக இருக்கலாம், எதை செய்தாலும் நாம் உற்சாகத்துடன் செய்ய வேண்டும்.

- கடைசியாக பார்த்தோமானால், உதவி செய்தல். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது, கர்த்தர் நம்மேல் பிரியப்படுவார். உதாரணத்திற்கு நாம் கஷ்டத்தில் இருக்கும்போது கர்த்தர் எப்படியாவது நமக்கு உதவி செய்ய வேண்டும், ஏதாவது மனிதர்களை அனுப்பி நம்முடைய வாழ்க்கையில் ஒரு உதவியைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்போம். அதேபோல மற்ற மனிதர்கள் கஷ்டப்படும் போதும் நாம் அவர்களுக்கு போய் உதவி செய்யும்போது கர்த்தர் நம்மேல் பிரியமாக இருப்பார். நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. (நீதிமொழிகள் 3:27) என்று வேத வசனம் சொல்லுகிறது . உதாரணத்திற்கு நல்ல சமாரியன் கதையை பார்த்தோமானால், குற்றுயிராய் கிடந்த மனிதனை கண்டு ஆசாரியரும் லேவியரும் ஒதுங்கி போனார்கள். அவர்கள் நினைத்தால் அந்த இடத்தில் உதவி செய்ய முடியும். ஆனால், அவர்கள் அவனை கண்டு கொள்ளவே இல்லை. ஆனால், அந்த நேரத்தில் வந்த நல்ல சமாரியன் அவனைப் பார்த்து மனதுருகி அவனுக்கு உதவி செய்து அவனை சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்து, காசும் கொடுத்து விட்டுப் போகிறான். இதேபோல் தான் ஒருவர் கஷ்டத்தில் இருந்தால் நமக்கும் நல்ல சமாரியன் போல் ஒரு நல்ல ஒரு மனதுருக்கம் வர வேண்டும்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நாம் கஷ்டத்தில் இருக்கும்போது மனதுருகி நமக்காக உதவி செய்கிறார். அநேக மனிதர்களையும் நமக்கு அனுப்பி உதவி செய்கிறார். அதேபோல், நாமும் பிறர் கஷ்டத்தில் இருக்கும்போது மனதுருகி நாம் பிறருக்கு உதவி செய்யும் போது அவருடைய இருதயம் நம்மேல் பிரியமாய் இருக்கும். இது போன்ற காரியங்கள் நாம் செய்யும் போது நாம் கர்த்தரை அதிகமாக மகிழ்விக்கலாம். இன்னும் அநேக காரியங்களில் நாம் தேவனை மகிழ்விக்கலாம். ஆனால், இன்று நாம் ஒரு ஏழு காரியங்களை மட்டும் பார்த்திருக்கிறோம்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென் .