சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை ஒரு கடலில் நாம் பயணிப்பது போலவே இருக்கிறது. கடலில் பயணிப்பது முதலில் நன்றாகவே இருக்கும். எதிர்காற்றும், கப்பலை மோதுகின்ற பெரிய பெரிய அலைகளும், புயல்களும் வரும்வரை. நேரம் செல்ல செல்ல இதை எதிர்கொள்ளும் சக்தியை நாம் இழந்து மனதிலும் உடலிலும் பயங்கரமான சோர்வுக்குள் தள்ளப்படுகிறோம். நம் வாழ்க்கையும் இந்த கடல் பயணத்தை போல் தான். சில நேரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரையே தெரிவதில்லை, ஒரு நம்பிக்கையும் தெரிவதில்லை. நமக்கு சுற்றி தெரிவதெல்லாம் நம்மை சுற்றி உள்ள கடல் தண்ணீர் மட்டுமே. சில நேரம் ஏன் தான் இப்படியொரு கடலில் பயணித்தோமோ, அதாவது ஏன் தான் இப்படியொரு முடிவுகளை நம் வாழ்க்கையில் எடுத்தோமோ என்கின்ற விரக்தி ஏற்படுகிறது. சில நேரம் நம்முடைய சூழ்நிலையின் காரணமாக இந்த மாதிரி கடினமான கடல் பயணம் செய்ய தள்ளப்பட்டிருப்போம், அப்போஸ்தலர் பவுல் போல. இல்லாவிட்டால் நம்முடைய மீறுதல், தேவ சத்தத்திற்கு கீழ்ப்படியாமல் போனதின் காரணமாக யோனாவை போல தள்ளப்பட்டிருப்போம். இதில் நாம் எந்த வகையை சார்ந்தவர்களாய் இருந்தாலும் நம்முடைய நெருக்கத்திலே நாம் கர்த்தரை நோக்கி கூப்பிடும் போது அவர் நம்மை மீட்கிறார்.
(நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது. ஏசாயா 43:2).

இப்படியொரு பயணத்திலும் அன்பும் இரக்கமுமுள்ள நம்முடைய கர்த்தர் நம்முடனே இருக்கிறார் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நம்முடைய எல்லா துவக்கத்திற்கும் ஒரு முடிவு உண்டு. ஏனென்றால் நம் தேவன் அல்பாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமாவுமிருக்கிறார்.
(இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.-வெளிப்படுத்தல் 1:8).
முதலில் அப்போஸ்தலராகிய பவுல் பண்ணிய கடல் பிரயாணத்தை பற்றி பார்க்கலாம்.

(கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங் கடுங்காற்று அதில் மோதிற்று. கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம் – அப்போஸ்தலர் 27:14,15).
இது போல சூழ்நிலைகளில்1.நாம் நினைக்கும் திசைகளில் நம் வாழ்க்கை நகர்வதில்லை. நம் வாழ்க்கை எந்த திசையில் போகிறதோ, அதின் வழியாகவே போக நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம்.

(மேலும் பெருங்காற்று மழையில் நாங்கள் மிகவும் அடிபட்டபடியினால், மறுநாளில் சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள்-அப்போஸ்தலர் 27:18).2.அடுத்தபடியாக நமக்கு ஒரு உணர்வு வருகிறது.ஒருவேளை நாம் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டோமோ என்று சொல்லி நம் வாழ்க்கையில் சிலவற்றை நம்மை விட்டு எறிகிறோம். ஆனாலும் சில நேரங்களில் நம் வாழ்க்கை இன்னும் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வருவதில்லை.
(அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக்கொண்டிருந்தபடியினால், இனி தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று-அப்போஸ்தலர் 27:20).

3.இன்னும் நம் பிரச்சனைகள் ஓயாததால் ,ஒரு நிரந்தர முடிவுக்கு வராததால், நம்பிக்கையிழப்பு என்கிற ஆழமான மனச்சோர்வுக்குள் தள்ளப்படுகிறோம்.(பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள்.ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்-அப்போஸ்தலர் 27:33,34).
4.அடுத்தப்படியாக நமக்கு சாப்பாட்டின் மேல் ஒரு வெறுப்பு வருகிறது. யாரிடமும் பேச பிடிப்பதில்லை, எங்கேயும் போக பிடிப்பதில்லை. அந்தளவிற்கு சில நேரம் விரக்தியின் உச்சத்திற்கு போகிறோம். இதை எழுதும் போது “என் உள்ளம் உம்மை நோக்கி” என்ற பாடலில் உள்ள ஒரு சரணம் என் நினைவிற்கு வருகிறது.

பெலனில்லையே போராடபாரினில் வேறு துணையில்லையேபெலன் தருவேன் என்று சொன்னவரேபாடுகிறேன் பெலன் தாரும்…இப்படி ஒருவருக்கும் பெலன் இல்லாத நேரத்தில் கர்த்தர் தம்முடைய தூதனை அப்போஸ்தல பவுலிடத்திற்கு அனுப்புகிறார்.(ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று:பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்-அப்போஸ்தலர் 27:23,24)

தேவன் பவுலின் வாழ்க்கையில் அடுத்ததாக என்ன நடக்க போகிறது என்ற வெளிப்பாட்டையும், பவுலின் பொருட்டு அவரோடு பயணிக்கிற எல்லாருடைய உயிரையும் காப்பாற்ற போவதாக வாக்குறுதி கொடுக்கிறார்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று இதை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் சொல்கின்ற செய்தி இதுவே. நீங்கள் கண்டிப்பாக இந்த ஆபத்து நிறைந்த கடல் பயணத்தை வெற்றிக்கரமாக முடிப்பீர்கள். ஏனென்றால், தேவன் உங்களைக் கொண்டு இந்த உலகத்தில் செய்ய வேண்டிய திட்டங்கள் உள்ளது. அதற்கு முன்னே எந்த புயலோ, எந்த காற்றோ, எந்த மனிதர்களோ, எந்த பிசாசோ உங்கள் உயிரை பறிக்க முடியாது. இதுமட்டுமில்லாமல் தேவன் இன்னொரு ஆசீர்வாதத்தையும் தருகிறார். உங்கள் பொருட்டு உங்கள் வாழ்க்கை பயணத்தில் உங்களோடு பயணிக்கிற ஒவ்வொருவரையும் காப்பாற்ற போகிறார். ஒருவருக்கும் ஒரு சேதமும் வராது. ஒருவேளை உங்கள் குடும்பத்தினருக்காக, இல்லாவிட்டால் உங்கள் நண்பர்களுக்காக, உங்கள் சபைக்காக, இல்லாவிட்டால் யாரோஒருவருக்காக நீங்கள் ஊக்கமாய் ஜெபித்து கொண்டிருக்கலாம். ஒருவேளை அவர்கள் முழுநம்பிக்கையும் இழந்து போய் காணப்பட்டாலும், கர்த்தர் உங்கள்

நிமித்தமாய் அவர்களை காப்பாற்ற போகிறார். உங்களுக்கு ஒரு எதிர்கால திட்டத்தையும், ஒரு தைரியத்தையும் தர போகிறார். எனவே கலங்காமல், திடமனதாயிருங்கள்.
அடுத்தப்படியாக யோனாவிற்கு கர்த்தர், அவருடைய கீழ்ப்படியாமை காரணமாக ஒரு கடல் பயணத்தை நியமித்தார். கப்பலில் இருந்து கடலுக்குள் தூக்கி எறியப்பட்டார். மிக மிக ஆபத்தான இந்த பயணத்தில் ஒரு பெரிய மீனின் வாயில் போய் அகப்பட்டுக் கொண்டார். இதுபோல நாமும் சில நேரங்களில் நம்முடைய பாவங்கள், மீறுதல்கள், கீழ்ப்படியாமை காரணமாக இப்படிப்பட்ட பெரிய பிரச்சனைகளில் போய் மாட்டி விடுகிறோம். மனித பெலத்தினால் சுத்தமாக வெளியே வர முடியாத இடம் தான். நாம் சில பாடங்களை கற்றுக்கொள்ளும்படியாய், நாம் இந்த தவறுகளை இனி செய்யாமல் இருப்பதற்காக தேவனே இப்படிப்பட்ட மரண பயத்திற்குள் நம்மை கொண்டு போகிறார்.
(இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு-சங்கீதம் 130:7)

ஆனாலும் அவரிடத்தில் கிருபையும், திரளான மீட்பும் இருப்பதால் நம்முடைய தவறுகளை அறிக்கையிட்டு அவருடைய இரக்கத்திற்காய் கெஞ்சும்போது கர்த்தர் நம்மை இந்த பெரிய ஆபத்திலிலருந்து மீட்டு உயிரோடே கரைக்கு வந்து சேர்க்கிறார்.
(தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச்சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்- யோனா 2:5,6).யோனா இப்படியாக விண்ணப்பம்போது கர்த்தர் மீனுக்கு உத்தரவு கொடுத்தார். அது யோனாவை பத்திரமாக ஒரு சேதமும் செய்யாமல் கரையிலே வந்து சேர்த்தது.

(கர்த்தர் மீனுக்குக் கட்டளை- யிட்டார், அது யோனாவைக்- கரையிலே கக்கிவிட்டது-யோனா 2:10)இதை வாசிக்கிற நீங்கள் ஒருவேளை உங்கள் பாவங்கள் அல்லது தேவனுக்கு கீழ்ப்படியாமல் செய்த செயலின் நிமித்தமாகத்தான் இப்படிப்பட்ட ஒரு பிரச்சனையில் அகப்பட்டதாக உணர்த்தப்பட்டால், இன்றே தேவனிடம் திரும்பி யோனாவை போல் ஜெபியுங்கள். எந்த பிரச்சனை உங்களை விழுங்கினதோ, அதே பிரச்சனையை பார்த்து இன்று உங்களை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்க்கும்படிநம்முடைய தேவனாகியஇயேசு கிறிஸ்து கட்டளையிடுவார்.
”அப்போஸ்தலர் பவுலையும், யோனாவையும் ஆபத்தான கடலிலிருந்து மீட்டு பத்திரமாக ஒரு சேதமும் இல்லாமல் கரை சேர்த்த தேவன் இன்று உங்கள் வாழ்விலும் ஒரு அற்புதத்தை செய்ய போகிறார்”.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!ஆமென்