ஏற்ற காலம் இதுவே.
கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்?
கிறிஸ்தவ வாழ்க்கையிலே சில நேரம் தேவன் நம்மை அமைதியான காலங்களுக்குள் அழைத்துச் செல்வார். அமைதியான காலங்கள் என்று சொன்னால், அந்தக் காலத்தில் நம்மால் நினைத்ததை எதையுமே செய்ய முடியாத அளவுக்கு ஒரு குறுகிய இடத்திற்குள், ஏதோ ஒரு திட்டத்திற்காக நம்மை அடைத்து வைப்பது போல வைத்திருப்பார்.

ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் (1 பேதுரு 5:6). என்று வேத வசனம் சொல்லுகிறது.
எனவே, இந்த காலமும் கண்டிப்பாக நம்மை ஒரு உயரத்துக்கு கொண்டு வரும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆரம்பத்தில் எதுவுமே தோன்றாத நமக்கு கொஞ்சம் காலம் ஆக ஆக கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்? என்ற கேள்வி நமக்குள் வருகிறது. இதைத்தான் சங்கீதத்தில் தாவீது கர்த்தரை பார்த்து கேட்கிறார். என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் (சங்கீதம் 6:3).நம்முடைய வாழ்க்கையிலும் அநேக முறை இதுபோன்ற சோர்வான நிலை நமக்கு கண்டிப்பாக வரும்.
ஆரம்பத்தில் தேவன் நம்மை அடைத்து வைக்கும் போது எதுவுமே தோன்றாமல் இருந்தாலும் ,நாட்கள் போகப்போக எப்பொழுது இந்த சூழ்நிலையை விட்டு வெளியே வருவோம் என்ற ஒரு ஏக்கம் நமக்குள் வரும். ஏனென்றால், இந்த நேரத்தில் நம்மால் எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்படுகிறோம். கர்த்தருடைய திட்டத்துக்குள் தான் இருக்கிறோம். அவருடைய கரத்துக்குள் தான் இருக்கிறோம் .ஆனாலும் இந்த அடைப்பின் காலம் ,அமைதியின் காலம், செயல்பட முடியாத ஒரு காலம், முடங்கி இருக்கிறதான ஒரு காலம், பெருக்கம் எதுவும் இல்லாத காலம், கடைசியில் ஒரு ஆத்தும வியாகுலத்தை கொண்டு வருகிறது. தேவனை நோக்கி நாம் ஒரு முறுமுறுக்கவில்லை. அவர் சத்தத்துக்கு கீழ்ப்படிந்து தான் இந்த அடைப்பின் காலத்திற்குள் நாம் போய் இருக்கிறோம். ஆனாலும், ஒரு ஏக்கம் நம்முடைய இருதயத்திற்குள் வருகிறது. இதே போன்ற நிலைமை நோவாவுடைய வாழ்க்கையில் வந்தது. அவர் தேவனின் திட்டத்துக்கு கீழ்ப்படிந்து பேழையை உண்டாக்கினார். அவரும் அவர் குடும்பத்தினரும் ஒரு பெரிய அடைப்பின் காலத்திற்குள் தள்ளப்பட்டனர். அதனால் அவரும் அவர் குடும்பத்தினரும் தேவனுடைய கரத்திற்குள் பெரிய பாதுகாப்பை உணர்ந்தனர். தேவனுடைய திட்டமும் நிறைவேறியது. ஆனாலும், உடனே அவர்கள் வெளியே வர விடாதபடிக்கு பூமியின் மேல் தண்ணீர்

இன்னும் இருந்தது. கர்த்தர் தாமே அந்த பேழையின் கதவை அடைத்து இருந்தார். இவர்களால் தாங்களாக வெளியே வர முடியாது. (ஆதியாகமம் 8:6,7) இல் வாசிக்கிறோம் .நோவா பேழையின் ஜன்னலைத் திறந்து ஒரு

காகத்தை வெளியே அனுப்புகிறார் .எப்படியாவது இந்த தண்ணீர் குறைந்து விடும், நாம் எப்படியாவது சீக்கிரம் வெளியே வர வேண்டும் என்ற ஒரு ஆவல், ஒரு எதிர்பார்ப்பு ,ஒரு ஆத்துமா வியாகூலம் இதெல்லாம் இருக்கிறது. ஆனால் தண்ணீர் குறைந்தது போல தெரியவில்லை. இன்னும் சிறிது நாள் கழித்து புறாவை அனுப்புகிறார். அதுவும் இளைப்பாற இடம் இல்லாமல் திரும்ப அவனிடத்திற்கு வருகிறது. அதனால் நாம் வெளியே போவதற்கு சரியான காலம் வரவில்லை, நம்முடைய அடைப்பின் நாட்கள் இன்னும் முடியவில்லை என்பதை புரிந்து கொள்கிறார். அதன் பின்பும் ஒரு ஏழு நாள் கழித்து ஒரு புறாவை அனுப்புகிறார். அது சாயங்காலத்தில் ஒரு அடையாளத்தோடு வருகிறது.

தன் வாயில் ஒரு ஒலிவமர இலையை கொண்டு வருகிறது. இன்றைக்கும் இது போல அடைப்பின் காலத்திற்குள் இருக்கிற நமக்கு பரிசுத்த ஆவியானவர் தாமே ஒரு அடையாளத்தோடு நம் வாழ்க்கையில் வருகிறார். இந்த அடையாளத்தை கண்டவுடன் நோவாவுக்கு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்ற ஒரு பெரிய தெளிவு வருகிறது. சீக்கிரத்தில் இந்த பேழையை விட்டு நாம் வெளியே போக போகிறோம். இதை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் தேவன் சொல்லுகிறது என்னவென்றால் சீக்கிரத்தில் நீங்கள் இந்த பேழையையை விட்டு வெளியே போகப் போகிறீர்கள். போகும்போது வெறுமையாக போகாமல் ஒரு மிகப்பெரிய ஆசிர்வாதத்தை தேவன் நோவாவுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் கட்டளையிடுகிறார். (ஆதியாகமம் 8 :16, 17) இல் வாசிக்கிறோம். நீயும் உன்னோடேகூட உன் மனைவியும் உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்ச ஜந்துக்கள் ஆகிய பறவைகளையும் மிருகங்களையும்

பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் உன்னுடைய வெளியே வர விடு அவைகள் பூமியின்மேல் பலுகிப் பெருககடவது என்றார். இப்படியாக தேவன் நோவாவின் வாழ்க்கையில் பெரிய ஒரு பெருக்கத்தின் ஆசீர்வாதத்தை கொடுத்து வெளியே அனுப்புகிறார். தேவன் இந்த ஆண்டில் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தமும் அதுவே, பெருக்கத்தின் ஆண்டு என்று நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஒருவேளை இதுவரை நம்முடைய வாழ்க்கையில் எந்த பெருக்கத்தையும் நாம் காணாதது போல இருக்கலாம். ஏனென்றால், பேழைக்குள் நம்முடைய வாழ்க்கை இருக்கும்போது நம்முடைய வாழ்க்கையில் எந்தவிதமான பெருக்கத்தையும் நாம் காண முடியாது. ஆனால் பேழையை விட்டு வெளியேறிய அடுத்த நிமிடத்திலிருந்து நமக்கு தேவையான பெருக்கங்கள் வருகிறது. நாம் நினைத்ததை செய்யக்கூடிய

சகலவிதமான சுதந்திரத்தை தேவன் நமக்கு தருகிறார். எனவே, கூடிய சீக்கிரத்தில் தேவன் நம்முடைய வாழ்க்கையில் அடைப்பின் காலத்தில் இருக்கிற நம்மை வெளியே கொண்டுவந்து பெருக்கத்தை தரப்போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை. இதுவும் அவருடைய திட்டத்தில் ஒன்றே. நம்முடைய ஆத்தும வியாகுலங்கள் அறிந்திருக்கிற ஒரே தேவன் நம்முடைய தேவன் மட்டுமே. நாம் நினைக்கலாம் கடைசிவரை நம் வாழ்க்கை இந்த பேழையின் வாழ்க்கையைப் போலவே இருக்குமோ என்று., ஆனால் தேவன் நோவாவை குறித்து பெரிய திட்டத்தை வைத்திருந்தார். எல்லா நாளும் அவர் பேழைக்குள்ளேயே இருப்பது அவருடைய திட்டம் அல்ல. அவர்களை வெளியே அனுப்பி பெருக்கத்தை காண்பதே அவருடைய மிகப்பெரிய திட்டமாக இருந்தது. சோர்ந்துபோய் கர்த்தாவே, எதுவரைக்கும் எனக்கு இறங்காதிருப்பீர் என்று கேள்வியோடு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

கர்த்தர் உங்களுடைய பேழையின் கதவை திறந்து சீக்கிரத்தில் உங்களை வெளியே கொண்டுவரப் போகிறார். வெளியே கொண்டு வருவது மட்டுமல்லாமல் ,உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்திலும் பெரிய பெருக்கத்தை கட்டளையிட போகிறார். எனவே தேவன் நம் வாழ்க்கையில் அடைத்து வைத்திருந்த கதவைத் திறக்க போகிற நிமிடத்தை நோக்கி நாம் ஆவலோடு காத்திருப்போம். நிச்சயம் அது நிறைவேறும்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.