எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. (ஏசாயா60:1) சில நேரங்களில் நாம் சுத்தமாக எழும்ப கூட முடியாத அளவுக்கு நம்முடைய வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கிறது. ஆனால், தேவன் இன்று நம்மை பார்த்து” எழும்பி பிரகாசி என்று சொல்கிறார்“. ஏனென்றால், அவர் இந்த உலகத்தில் ஒளியாக வந்தார். உலகத்தில் ஒளியாக வந்தது மட்டுமல்லாமல் எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாக வந்தார். உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.(யோவான் 1:9)

அதாவது, நாம் எப்பேர்ப்பட்ட ஒரு மோசமான மனிதர்களாக இருக்கலாம், மிகவும் மோசமான நிலவரத்தில் நம்முடைய வாழ்க்கை போய் கொண்டிருக்கலாம், நம்மால் நம்முடைய சூழ்நிலையை மாற்ற முடியாதது போல இருக்கலாம், நம்முடைய சூழ்நிலை எந்த ஒரு மனிதனாலும் மாற்றவே முடியாது என்றது போன்ற இக்கட்டான நிலைமையில் கூட நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், இந்த ஒளியாகிய இயேசு கிறிஸ்து இன்று நம்மை சந்திக்கும் போது, அவருடைய ஒளி நம்முடைய வாழ்க்கையில் வரும் போது, நம்முடைய எப்பேர்ப்பட்ட சூழ்நிலையும் தலைகீழாக மாற ஆரம்பித்துவிடும். வேதத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் பெதஸ்தா குளம் இடத்திலே 38 வருடமாய் படுத்திருந்ததாக நாம் வாசிக்கிறோம். நீங்களே நினைத்து பாருங்கள், 38 வருடம் என்பது எவ்வளவு நீண்ட ஆண்டுகள் என்று., முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று

விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.(யோவான் 5:5-8) அத்தனை ஆண்டுகளாக அவர் அப்படி இருந்த போதிலும் அவரை தூக்கிக் கொண்டு போய் அந்த தூதன் கலக்கும் நேரத்தில் விடுவதற்கு ஒருவர் கூட இல்லை, அக்கம்பக்கத்தினர் ஒருவர் கூட இல்லை, எல்லாரும் அவர்கள் ஆசீர்வாதத்தை மட்டுமே தேடி கொண்டிருந்தார்களே தவிர, யாருமே இவர் இவ்வளவு ஆண்டுகளாக படுத்துக்கொண்டே இருக்கிறாரே, இவருக்கு நாம் கொஞ்சம் இடம் கொடுப்போம் என்று யாருமே சிந்திக்கவே இல்லை. இவருக்கு பின்பாக ஏதோ ஒரு வருடம், இரண்டு வருடமாக வியாதி பெற்று வந்தவர்கள் கூட கண்டிப்பாக சுகம் பெற்றிருப்பார்கள். அவ்வளவு ஏன் ? ஒரு வாரம், ஒரு

நாள் வியாதிபட்டவர்கள் கூட கண்டிப்பாக சுகம் பெற்று இருப்பார்கள். ஆனால், இவரைப்பற்றி நினைப்பதற்கு அங்கே யாருமே இல்லை. அவருக்குள் ஆதங்கம் இருந்தது, யாராவது நம்மை தூக்கி விட்டால் நன்றாக இருக்குமே, எந்த ஒரு மனிதராவது நம்மை இந்த சூழலில் இருந்து தூக்கி விட்டால் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கம் இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கும் கூட இப்படி ஒரு ஆதங்கம் இருக்கலாம். யாராவது நம்மை இந்த கடன் பிரச்சினையில் இருந்து தூக்கி விட்டால் நன்றாக இருக்குமே! யாராவது நமக்கு இந்த படிப்பை சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே! யாராவது நமக்கு இந்த பொருளுதவி செய்தால், பண உதவி செய்தால் நன்றாக இருக்குமே! யாராவது நம்மை ஆவிக்குரிய வழியில் வழி நடத்தினால் நன்றாக இருக்குமே! யாராவது நமக்கு திருமண வாழ்க்கைக்கு பெண் அல்லது மாப்பிள்ளை பார்த்து கொடுத்தால் நன்றாக இருக்குமே! யாராவது நமக்கு உதவி செய்தால் நன்றாக இருக்குமே! என்று ஆழ் மனதில் ஒரு ஆதங்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம்! யாராவது நம்முடைய பாரத்தை கூட சேர்ந்து சுமந்தால் நன்றாக இருக்குமே! யாராவது நமக்காக ஜெபித்து விடுதலை வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே! இந்த உலகத்தில் ஏதாவது ஒரு மனிதராகிலும் நமக்கு இரங்கி உதவி செய்ய மாட்டார்களா? என்ற ஆதங்கத்தோடு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அந்த மனிதனுக்கு உதவி செய்ய யாருமே முன்வரவில்லை.

எல்லாரும் அவரவருடைய ஆசீர்வாதத்தை மட்டுமே அந்த இடத்தில் தேடிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் நம்மை சுற்றியுள்ள எல்லாருமே அவர்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு, நம்மை யாருமே கண்டுக் கொள்ளாதது போல, நம்மைப் பற்றி ஒரு சிறு அக்கறை கூட காட்டாமல் இருப்பது போல நாம் உணரலாம். ஆனால் நம்மையும், நம்முடைய இருதயத்தின் ஆழத்தையும் அறிந்தவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே. அவர் அந்த மனிதனிடத்தில் வருகிறார். வந்து அவன் நெடுங்காலமாய் காலமாய் அவன் அந்த இடத்தில் இருப்பதை இயேசுகிறிஸ்து அறிகிறார். நாம் இந்த பிரச்சினையில் வெகு காலமாய் கஷ்டப்படுகிறோம் என்பது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துக்கு மட்டுமே தெரியும். ஒருவேளை நீங்கள் பிறந்தது முதல் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கலாம். இனிமேல் எனக்கு கண்டிப்பாக இதிலிருந்து வெளியே வரவே முடியாது என்று நம்பிக்கை இழந்த நிலையில் கூட நீங்கள் இருக்கலாம். இனிமேல் என்னை இரட்சிப்பதற்கு யாராலும் முடியாது, இந்த பிரச்சினையில் இருந்து தூக்கி விடுவதற்கு யாராலும் முடியாது, இனி நான் ஒருக்காலும் எழும்பவே முடியாது, நான் இப்படித்தான் இருக்கப் போகிறேன், என்னுடைய தொழில் இப்படி படுத்த படுக்கையாக இருக்க போகிறது, என்னுடைய வாழ்க்கை இப்படி படுத்த படுக்கையாகவே இருக்க போகிறது என்ற நினைப்போடு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், உங்களையும் என்னையும் பிரகாசிக்க பண்ண நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் வருகிறார். இயேசு கிறிஸ்து அந்த மனிதனிடம் வந்து, நீ சுகமாக வேண்டும் என்று விரும்புகிறாயா?என்று கேட்கிறார். அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள் வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். அப்போது இயேசு சொல்கிறார் நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு போ என்று சொல்கிறார். அந்த ஒளி நம்முடைய வாழ்க்கையில் வரும் போது இவ்வளவு காலமாய் படுத்துக் கிடந்த நம்மால் இப்பொழுது எழுந்து நிற்க முடிகிறது. நிற்க முடிகிறது மட்டுமில்லாமல், நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு பிரகாசம் வருகிறது. ஒருவேளை இது வரை உங்களுடைய சூழ்நிலை மிகவும் படுத்த படுக்கையாக இருப்பது போல, ஒரு சிறிய அசைவு கூட அசைக்க முடியாமல் இருப்பது போல உங்களுடைய சூழ்நிலை இருக்கலாம். ஆனால், கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஒளியாக நம்முடைய வாழ்க்கையில் வரும் போது எல்லாமே மாறுகிறது. நம்மால் மறுபடியும் எழுந்து பிரகாசிக்க முடிகிறது. அவன் இந்த 38 வருடங்களாக அநேக மனிதர்களை தன்னுடைய வாழ்க்கையில் பார்த்திருக்கலாம். ஒவ்வொருவரும் அவரவருடைய வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு, அவரவருடைய ஆசீர்வாதங்களை மட்டுமே தேடிக்கொண்டு, இவனைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் இருப்பதை அவன் பார்த்து இருக்கலாம், ஒரு சுயநலமான பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைவுகள் கூட இருக்கலாம். ஆனால், அவனுடைய வாழ்க்கையில் வித்தியாசமான ஒருவர் வந்தார். அவர் தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. இன்றைக்கும் கூட நீங்கள் அநேக மனிதர்களை உங்களுடைய வாழ்க்கையில் பார்த்து பார்த்து மனிதர்கள் மீது ஒரு பெரிய வெறுப்பு ஏற்பட்டு இருக்கலாம் அல்லது எந்த மனிதர்களும் நமக்கு உதவி செய்ய முன் வரவில்லையே என்ற ஒரு பெரிய ஆதங்கத்தோடு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே நமக்கு உதவி செய்ய முடியும். அவர் எல்லாரையும் விட மிகவும் வித்தியாசமானவர். ஏனென்றால், அவர் நமக்காக இந்த உலகத்திற்கு வந்தார். இருளில் வாழும் நமக்கு ஒரு பெரிய வெளிச்சத்தை தருவதற்காகவே வந்தார். இன்றைக்கும் இந்த வசனத்தை நாம் இருதயத்தின் ஆழத்திலிருந்து விசுவாசிக்கும் போது, கர்த்தரால் நம்மை எழுந்து பிரகாசிக்க பண்ண முடியும். அவர் நம்முடைய வாழ்க்கையில் ஒளியாக வருகிறார். எந்த பகுதிகளில் நாம் மிகவும் இருளாக நினைக்கிறோமோ, அந்த பகுதிகளில் தேவன் வெளிச்சமாக வருகிறார். நீங்கள் கூட அநேக நாட்களாக தேவனே எனக்கு உதவி செய்யும்படி ஏதாவது ஒரு மனிதனை அனுப்பும் என்று ஜெபித்துக் கொண்டிருக்கலாம். ஆனால்,தேவன் நேரடியாகவே அந்த மனிதனிடத்துற்கு வருகிறார். அவர் நேரடியாக களத்திற்கு வந்து அந்த மனிதனை சுகமாக்க விரும்புகிறார். அதேபோல இன்று நம்முடைய வாழ்க்கையில் தேவன் எந்த ஒரு மனிதனையும் அனுப்பாமல் அவரே நேரடியாக நம்முடைய வாழ்க்கையில் வந்து, நாம் எதிர்பார்க்கிற அந்த சுகத்தை, நாம் எதிர்பார்க்கிற ஆசீர்வாதத்தை, நாம் எதிர்பார்க்கிற விடுதலையை நமக்கு தரப்போகிறார். இதேபோல் வேதத்தில் நாம் வாசிக்கிறோம். மோசே இப்படியாக ஜெபிக்கிறார். கர்த்தாவே உம்முடைய மகிமையை காண்பித்தருளும் என்று. அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.(யாத்திராகமம் 33:18) அதே போல அவருடைய முகத்தை மகிமையாக மாற்றுகிறார். அவர் தேவனுடைய சமூகத்தில் இருந்து கீழே இறங்கி வரும்போது அவருடைய முகம் மிகவும் மகிமை ஆக மாறுகிறது. அவருக்கே தெரியவில்லை. அவருடைய முகம் எவ்வளவு மகிமையாக இருக்கிறது என்று. ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்..(யாத்திராகமம் 34:30). மோசே அவர்களோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான்..(யாத்திராகமம் 34:33)

ஒருவேளை உங்களுக்குள்ளே இப்படிப்பட்ட ஜெபத்தோடு நீங்கள் இருக்கலாம். ஆண்டவரே! என்னுடைய ஊழியத்தை மகிமையான ஒரு ஊழியமாக மாற்றும். நான் செய்கிற தொழிலை ஒரு மகிமையான தொழிலாக மாற்றும். என்னுடைய குடும்பத்தை ஒரு மகிமையான குடும்பமாக மாற்றும். என்னுடைய முழு வாழ்க்கையை மகிமையாக மாற்றும் என்று. கர்த்தர் இன்று நம்முடைய வாழ்க்கையையும் மாற்றுகிறார். மோசேயை கண்டு எல்லோரும் பயந்தார்கள். எல்லா மனிதர்களும் ஆச்சரியப்படும் அளவுக்கு அவர் முகம் மாறினது. இன்று உங்களையும் என்னையும் பார்க்கிறவர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு தேவன் நம்முடைய வாழ்க்கையை மகிமையாக மாற்றப் போகிறார். சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம். அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.

கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும். கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான். சங்கீதம் (126:1-6).
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.